கேப்டவுன் ஒருநாள் போட்டியில் கோலியின் அதி அற்புத 160 நாட் அவுட்டுடன் 303 ரன்கள் குவித்த இந்திய அணி பிறகு குல்தீப், சாஹலை வைத்து தென் ஆப்பிரிக்காவை 40 ஓவர்களில் 179 ரன்களுக்கு சரணடையச் செய்தனர். இதன் மூலம் தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக ஒருநாள் தொடரில் இந்திய அணி 3-0 என்று முன்னிலை பெற்றுள்ளது.
79/1 என்று இருந்த தென் ஆப்பிரிக்க அணி அதன் கேப்டன் மார்க்ரம் விக்கெட்டை குல்தீப் யாதவ்விடம் தோனி ஸ்டம்பிக்கிற்கு இழந்த பிறகு சரியாக 100 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மீண்டும் குல்தீப், சாஹல் ரிஸ்ட் ஸ்பின் ஜோடி 8 விக்கெட்டுகளை 18 ஓவர்களில் வெறும் 69 ரன்களுக்கு தங்களிடையே பகிர்ந்து கொண்டனர். இந்தட் தொடரில் 21 விக்கெட்டுகளை இவர்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
முக்கிய வீரர்களின் காயம், ஆம்லாவின் பார்மின்மை, கடைசி டெஸ்ட் போட்டியில் தோல்வி ஆகியவற்றினால் தென் ஆப்பிரிக்க அணி மிகவும் மனவலிமை குன்றிய ஒரு அணியாக மாறியுள்ளது.
உண்மையில் குல்தீப், சாஹல் என்ன வீசுகிறார்கள் என்பது அவர்களுக்குப் புரியவில்லை, காற்றில் வேகமாக வந்தால் பிட்ச் ஆகி மெதுவாக வருகிறது, காற்றில் மெதுவாக வந்தால் பிட்ச் ஆகி சற்று வேகம் காட்டுகிறது, உள்ளே வரும் என்று ஆடுகிறார்கள் வெளியே செல்கிறது, வெளியே போகும் என்று ஆடுகிறார்கள் உள்ளே வருகிறது.
விக்கெட்டுகளைத் தூக்கி எறியாமல் தோற்கப்போவது உறுதி என்றான பிறகு சாஹல், குல்தீப் ஓவர்களை நின்று ஆடிப் பழகியாவது தொலைத்திருக்கலாம், ஆனால் அதை விடுத்து படு கண்றாவியாக ஆடி தோல்வியடைந்தது தென் ஆப்பிரிக்கா.
டாஸ் வென்று பீல்டிங் எடுத்த தவறு:
முதலில் டாஸில் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் நல்ல பேட்டிங் களத்தில் பீல்டிங்கைத் தேர்வு செய்தது முதல் தவறு. இதனால் கோலியின் அபாரமான இன்னிங்ஸை கண்கொண்டு பார்க்க நேரிட்டது அவர்களுக்கு. ஒருவேளை ரபாடா கோலியை கால்காப்பில் வாங்கியதாக முறையிட நடுவர் தீர்ப்பு சாதகமானது, ஆனால் கோலி ரிவியூ செய்து தீர்ப்பை மாற்றி எழுதியதோடு தென் ஆப்பிரிக்காவின் தலையெழுத்தையும் மாற்றி எழுதிவிட்டார்.
மேலும் மோர்னி மோர்கெலை உட்கார வைத்திருக்கக் கூடாது, காரணம் லுங்கி இங்கிடி தவறான லெந்த் மற்றும் லைனில் வீசி தவணை செட்டில் ஆக விட்டார்.
இடையில் கொஞ்சம் இந்திய அணியை கட்டுப்படுத்தியது தவிர டாஸ் வென்று இந்திய அணியை பேட் செய்ய அழைத்ததனால் ஆய பயன் என்னவென்று தெரியவில்லை.
டுமினி, மார்க்ரம் கூட்டணிக்குப் பிறகு உட்புகுந்த சாஹல், குல்தீப்!
ஹஷிம் ஆம்லா, பும்ராவின் வழக்கமான இன்ஸ்விங்கர் பந்துக்கு கிரீஸிற்குள் இருந்து ஆட முனைந்து கால்காப்பில் வாங்கினார், நேராக எல்.பி. ஆகி 1 ரன்னில் வெளியேறினார்.
மார்க்ரம் 42 பந்துகளில் 2 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 32 ரன்கள் எடுத்தார், இதில் பும்ரா வீசிய ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே தோள்பட்டை உயரம் வந்த பவுன்சரி லெக் திசையில் தூக்கி சிக்சருக்கு அடித்ததும், அடுத்த பந்தே மிக அழகாக கவர் திசையில் பவுண்டரி அடித்ததும் தான் ஒரு வீரர் என்பதைக் காட்டியதாக அமைந்தது. டுமினியும் இவரும் இணைந்து 16 ஓவர்களில் 78 ரன்களை மிகவும் நிதானமாகவும் பதற்றமடையாமலும் சேர்த்தனர்.
ஆனால் குல்தீப் யாதவ்வை கோலி கொண்டு வர ஒரு பந்து ஸ்டம்பில் பிட்ச் ஆகி கூக்ளியாகி வெளியே சென்றது, மார்க்ரம் பந்தின் பிட்ச்சிற்கு வரவேயில்லை சற்றே மேலேறி வந்து ஆடிய அவர் பீட் ஆனார், தோனி சம்பிரதாயங்களை நிறைவாகச் செய்தார். மார்க்ரம் 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
விக்கெட் கீப்பர் கிளாசன் 6 ரன்கள் எடுத்து சாஹலிடம் அவுட் ஆனார். ஸ்டம்பில் பிட்ச் ஆன பந்து சற்றே திரும்பி மட்டையைக் கடந்து கால்காப்பைத் தாக்கியது, அவுட்.
ஜே.பி.டுமினி மிக அருமையாக ஆடி வந்தார், அவர் தனது டச்சிற்கு வந்து கொண்டிருந்த போது 51 ரன்களில் சாஹல் பந்து ஒன்று உள்ளே திரும்ப கால்காப்பில் வாங்கினார். எல்.பி. ஆனால் ரிவியூ செய்து ஒரு ரிவியூவையும் காலி செய்தார்.
டேவிட் மில்லருடன் இணைந்து ஸோண்டோ இருவரும் 34 ரன்களை 10 ஓவர்களில் சேர்த்தனர். மில்லரும் சவுகரியமாக ஆடினார் என்று கூற முடியாது, புவனேஷ்வர் குமார், பும்ரா, சாஹல், குல்தீப் என்று தடவி 25 ரன்களை எடுத்து ஓரளவுக்குச் செட்டில் ஆன நிலையில் அடித்துப் பார்க்க வேண்டியதுதான் என்ற எண்ணத்தில் பும்ராவின் உள்ளே வந்த பந்தை சுற்றினார், மட்டையின் உள்விளிம்பில் பட்டு தோனியிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.
கிறிஸ் மோரிஸ் ஒரு அருமையான கவர் திசை பவுண்டரி அடித்தார், ஆனால் குல்தீப் யாதவ்வின் நேர் பந்து ஒன்றை லெக் திசை நோக்கி மண்டியிட்டு ஷாட் ஆட முயன்றார் பந்து சற்றே தாழ்வாக, மெதுவாக வர, அவர் ஸ்ட்ரோக்கை முடித்திருக்கையில் கால்காப்பைத் தாக்கி எல்.பி.ஆனது.
சோண்டோ (17) போன்ற வீரர்கள் இந்த மட்டத்தில் ஆட வாய்ப்பு கிடைப்பதே கடினம் அப்படியிருக்கையில் குல்தீப், சாஹலை நின்று ஆடிப் பழகியிருக்க வேண்டும், ஆனால் இள ரத்தம் 17 ரன்களில் சாஹல் பந்தை கன்னாபின்னாவென்று சுழற்றி கேட்ச் ஆகி வெளியேறினார். பெலுக்வயோவும் ஏதோ கம்பு சுழற்றினார் கோலியிடம் கேட்ச் ஆனது, ரபாடா சாஹலை மிட்விக்கெட் மேல் ஒரு சிக்ஸ் அடித்தார், அவர் 12 நாட் அவுட், எதிர்முனையில் இம்ரான் தாஹிரும் பாவம் சுற்றுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் சாஹல் பந்தை கோலியிடம் கேட்ச் கொடுக்க, கடைசியாக லுங்கி இங்கிடி குல்தீப் யாதவ் பந்தில் எல்.பி.ஆனார். தென் ஆப்பிரிக்கா பரிதாபமாக 179 ரன்கள்க்குச் சுருண்டது.
இந்தியா தரப்பில் சாஹல், குல்தீப் தலா 4 விக்கெட்டுகளையும் பும்ரா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் 1,000 ரன்கள் எடுத்த சாதனைக்கும் உரியவரானார் கோலி.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
24 mins ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago