இண்டியன் ஓபன் பாட்மிண்டன் காலிறுதியுடன் வெளியேறினார் சாய்னா

டெல்லியில் நடைபெற்று வரும் இண்டியன் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நெவால் காலிறுதியில் தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.

இந்தியாவில் நடைபெறும் போட்டி என்பதால் இதில் சாய்னா சாம்பியன் பட்டம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. ஆனால் அவர் ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தார்.

நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் சீனாவின் இகான் வாங்கை எதிர்கொண்டார். 39 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 16-21, 14-21 என்ற புள்ளிகள் கணக்கில் சாய்னா தோல்வியடைந்தார். சர்வதேச மகளிர் பாட்மிண்டன் தரவரிசையில் சாய்னா 8-வது இடத்திலும், வாங் 2-வது இடத்திலும் உள்ளனர். வாங்கிடம் சாய்னா தோல்வியடைவது இது 8-வது முறையாகும்.

இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே வாங்குக்கு நெருக்கடி அளிக்க வேண்டும் என்ற நோக்கில் சாய்னா விளையாடினார். ஆனால் துல்லியம் இல்லாத அவரது ஷார்ட்களை வாங் திறமையாக எதிர்கொண்டு சவால் அளித்தார். எனவே ஆட்டத்தில் வாங்கின் ஆதிக்கமே தொடர்ந்தது.

இப்போட்டியில் சாய்னா உடனடி மறுபரிசீலனை வாய்ப்புகள் இரண்டையும் பயன்படுத்தினார். ஆனால் அதனால் எந்தப் பயனும் கிடைக்கவில்லை. தோல்வியடைந்தது குறித்துப் பேசிய சாய்னா, எனது உடல் திறனையும், விளையாட்டுத் திறனை யும் மேலும் மேம்படுத்த வேண்டியது அவசியம் என்பதை உணருகிறேன். முக்கியமான சமயத்தில் சில தவறுகளை செய்தேன், அதுவே போட்டியில் எனக்கு பாதகமாக அமைந்துவிட்டது. காமன்வெல்த் மற்றும் ஆசிய போட்டிகளுக்கு செல்லும் முன்பு எனது தவறுகளை சரி செய்து கொள்வேன் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE