புதுப்பொலிவுடன் திருச்சி அண்ணா உள்விளையாட்டு அரங்கம் @ கேலோ இந்தியா போட்டிகள்

By தீ.பிரசன்ன வெங்கடேஷ்

திருச்சி: திருச்சியில் நாளை(ஜன.21) தொடங்க உள்ள கேலோ இந்தியாவிளையாட்டுப் போட்டிகளுக்காக, திருச்சி அண்ணா உள்விளையாட்டரங்கம் புதுப்பொலிவுடன் தயார்நிலையில் உள்ளது.

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 நகரங்களில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த விளையாட்டுப் போட்டிகளை சென்னையில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் நேற்று தொடங்கிவைத்தனர்.

இதில், திருச்சி அண்ணா விளையாட்டரங்கத்தின் உள் விளையாட்டரங்கில் மல்லர் கம்பம், களரி பயட்டு ஆகிய 2 போட்டிகள் நடைபெறுகின்றன. இதன்படி, மல்லர் கம்பம் போட்டி நாளை(ஜன.21) தொடங்கி ஜன.24-ம் தேதி வரையும், களரி பயட்டு போட்டி ஜன.27 முதல் ஜன.29-ம் தேதி வரையும் நடைபெறுகின்றன.

இதற்காக உள்விளையாட்டரங்கம் மற்றும் அருகில் உள்ள விடுதிகளின் கழிப்பறைகள், பார்வையாளர்கள் மாடம், விளக்குகள், சேதமடைந்த தளங்கள் புதுப்பிக்கப்பட்டு, விளையாட்டு அரங்கத்துக்கு புதிய வர்ணம் பூசப்பட்டுள்ளது. விளையாட்டுக்கு தேவையான மெத்தைகள், விரிப்புகள் கேலோ இந்தியா அமைப்பினரால் கொண்டு வரப்பட்டுள்ளன. வீரர்கள் பயிற்சி பெறவும், உணவு அருந்தவும் உள்விளையாட்டு அரங்கத்துக்கு அருகில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் 2 பிரம்மாண்ட கூடாரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. 10-க்கும் மேற்பட்ட ஜெனரேட்டர்கள் தயார்நிலையில் உள்ளன.

தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் 26-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து 436 வீரர், வீராங்கனைகள் இப்போட்டியில் பங்கேற்க நேற்று வரை கேலோ இந்தியா தளத்தில் பதிவு செய்துள்ளனர். மல்லர் கம்பத்தில் 16 அணிகள், களரி பயட்டில் 16 அணிகள் பங்கேற்க உள்ளன. வீரர்கள் தங்குவதற்கு மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து திருச்சி மாவட்ட விளையாட்டு அலுவலர் பி.வேல்முருகன் கூறியது:

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் தமிழகத்தில் முதல்முறையாக நடைபெறுகின்றன. போட்டிகளை கேலோ இந்தியா அமைப்பு நடத்துகிறது. அதற்கான ஒத்துழைப்பை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அளிக்கிறது. திருச்சியில் நடைபெறும் போட்டிகளுக்கான ஏற்பாடுகள், மருத்துவம், தூய்மைப் பணிகள், பாதுகாப்பு உள்ளிட்டவற்றை மாவட்ட நிர்வாகம், திருச்சி மாநகராட்சி, காவல் துறை ஆகியன இணைந்து செய்து வருகின்றன. போட்டி விவரங்கள் அடங்கிய பதாகைகள், இலச்சினையுடன் மாநகரின் முக்கிய பகுதிகளில் நிறுவப்பட்டுள்ளன. பணிகள்நிறைவடைந்து உள்விளையாட்டரங்கம் தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் மோடியின் திருச்சி வருகையால், அப்பணிகளை ஆட்சியர் மா.பிரதீப்குமார் தீவிரமாக கவனித்து வருகிறார். இதன்காரணமாக, திருச்சியில் நடைபெறும் கேலோ இந்தியா போட்டிக்கானதொடக்க விழா நிகழ்ச்சிகளை நாளை மறுநாள்தான்(ஜன.22) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆயினும் போட்டிகள் ஜன.21-ம் தேதிகுறித்த நேரத்தில் தொடங்கி நடைபெறும் என தெரியவந்துள்ளது.

மல்லர் கம்பம்: சோழ மன்னர்கள் மற்றும் பல்லவ மன்னர்கள் ஆட்சியில் அதிகம் விளையாடப்பட்டது மல்லர் கம்பம் விளையாட்டு. மல்லர் என்றால் வளம், வீரன் என்ற பொருட்களைக் குறிக்கிறது. நிலை மல்லர் கம்பம், கயிறு மல்லர் கம்பம், தொங்கும் மல்லர் கம்பம் என்று 3 வகையான மல்லர் கம்பம் உள்ளது.

அண்ணா விளையாட்டு அரங்கில் அமைக்கப்பட்டு வரும் பிரம்மாண்ட கூடாரங்கள். படங்கள்: ர.செல்வமுத்துகுமார்

மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் மல்லர் கம்பம் விளையாட்டு இன்றளவும் பிரபலமாக உள்ளது. 10-க்கும் மேற்பட்ட மாநில அரசுகள் மல்லர் கம்பம் விளையாட்டை அரசு விளையாட்டாக அங்கீகரித்துள்ளன. தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, ராமநாதபுரம், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இதற்கான பயிற்சிக் கூடங்கள் உள்ளன. களத்தில் நடப்பட்ட வழுக்கு மரத்தில் பல்வேறு ஆசனங்களை செய்வதே இதன் சிறப்பு. 90 விநாடிகளில் 16 வகையான ஆசனங்களை செய்யும் வீரர் சிறந்த வீரர் பட்டத்தை பெறுவார்.

களரி பயட்டு: பழந்தமிழகத்தில் தோன்றிய தற்காப்பு கலையான களரி பயட்டு கேரளாவில் மிகப் பிரபலம். தமிழகத்தில் கன்னியாகுமரியிலும் பிரசித்தி பெற்றது. வாள், கத்தி, சுருள்வாள், மான்கொம்பு, கண்டகோடாலி, மழு போன்ற ஆயுதங்களை களரி விளையாட்டில் பயன்படுத்துவர். வடக்கன் களரி, தெக்கன் களரி என இருவகைகள் உள்ளன

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்