“பாகிஸ்தான் அணிக்கு வேதனை” - தொடக்க கூட்டணியை பிரித்தது குறித்து ரிஸ்வான் கருத்து

By செய்திப்பிரிவு

கிறைஸ்ட்சர்ச்: டி20 கிரிக்கெட்டில் பாபர் அஸம் உடனான தனது ஓப்பனிங் கூட்டணியை பிரித்தது பாகிஸ்தானுக்கு வேதனை தரும் வகையில் அமைந்துள்ளதாக அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மொகமது ரிஸ்வான் கருத்து தெரிவித்துள்ளார்.

நியூஸிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நான்கு போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. அனைத்து போட்டிகளிலும் பாகிஸ்தான் தோல்வியை தழுவியுள்ளது. இந்த தொடரில் டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியின் ஆஸ்தான தொடக்க ஆட்டக்காரர்களாக இருந்த பாபர் அஸம் மற்றும் ரிஸ்வான் இணை மாற்றப்பட்டுள்ளது.

பாபர் மூன்றாவது பேட்ஸ்மேனாக அந்த அணியின் பேட்டிங் வரிசையில் களம் கண்டு வருகிறார். ரிஸ்வான் தொடக்க ஆட்டக்காரராகவே தொடர்ந்து வருகிறார். அவருடன் இடது கை பேட்ஸ்மேனான சைம் அயூப் விளையாடி வருகிறார்.

“அணியின் ஓப்பனிங் இணையை பிரித்தது பாகிஸ்தானுக்கு வேதனை தரும் வகையில் அமைந்துள்ளது. பாபரின் மனது பெரியது என நான் சொல்வேன். எங்கள் இணையை பிரிப்பதில் எந்த சிக்கலும் இல்லை என நாங்கள் இருவரும் தெரிவித்தோம். அணி நிர்வாகம் விரும்பும் வகையில் புதிய மாற்றங்களை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவித்தோம். சிறப்பான இணையை பிரித்தால் அதில் சிக்கலும், சவாலும் எழும். அணி நிர்வாகம் மாற்று முயற்சியை கையாண்டுள்ளது. யாரை எங்கு பயன்படுத்தலாம் என திட்டமிட்டு வருகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாபர் மற்றும் ரிஸ்வான் இணையர் ஐந்து முறை 150+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE