“முர்ரேவின் ட்வீட்டை பிரின்ட் எடுத்து ஃப்ரேம் போட்டு வைப்பேன்” - 16 வயது டென்னிஸ் வீராங்கனை

By செய்திப்பிரிவு

மெல்பர்ன்: தனது ஆட்டத்தை பாராட்டி டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே பதிவிட்ட ட்வீட்டை பிரின்ட் எடுத்து ஃப்ரேம் போட்டு வைப்பேன் என 16 வயதான இளம் டென்னிஸ் வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவா தெரிவித்துள்ளார்.

நடப்பு ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் கடந்த 14-ம் தேதி தொடங்கியது. கிராண்ட்ஸ்லாம் தொடரான இந்தத் தொடரில் உலக நாடுகளை சேர்ந்த டென்னிஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் மிர்ரா விளையாடி வருகிறார்.

இந்தச் சூழலில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்று ஆட்டத்தில் பிரான்ஸ் நாட்டு வீராங்கனை பேரியை எதிர்த்து விளையாடினார். இதில் 1-6, 6-1 என்ற இருவரும் தலா ஒரு செட்களை கைப்பற்றி இருந்தனர். தொடர்ந்து கடைசி செட் ஆட்டத்தில் மிர்ரா பின்தங்கி இருந்தார். இருந்தும் விடாமல் முயற்சிக்கும் அவரது மன வலிமையின் துணையோடு அந்த செட்டை வென்றார். அதன் மூலம் ஆட்டத்தையும் வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இந்தச் சூழலில் அவரது மன வலிமையை மற்றும் தன்னம்பிக்கையை பாராட்டி ஆன்டி முர்ரே ட்வீட் செய்திருந்தார்.

“முர்ரே ஆட்டத்தை பார்ப்பார் என நான் நினைத்து கூட பார்க்கவில்லை. அதன் பிறகு அவர் ட்வீட்டும் செய்துள்ளார். அதை நான் பிரின்ட் எடுத்து, ஃப்ரேம் போட்டு வைக்க விரும்புகிறேன். அதை என்னுடன் எடுத்து செல்வேன். சுவற்றில் மாட்டி வைப்பேன். தினந்தோறும் அதை பார்ப்பேன்” என மிர்ரா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE