அறிமுக டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட் வீழ்த்தி சாதனை: முன்னாள் காவலாளியின் கதை

By செய்திப்பிரிவு

அறிமுக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் முன்னாள் காவலாளி. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரர் ஷமர் ஜோசப் தான் அந்த காவலாளி.

ஒரு கனவு கண்டால் அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு”
என பாடலாசிரியர் பா.விஜய்யின் வரிகளுக்கு ஏற்ற வகையில் தனது கனவினை வேட்கையுடன் துரத்தி பிடித்துள்ளார் ஷமர் ஜோசப். 24 வயதான அவர் அறிமுக வீரராக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் களம் கண்டுள்ளார். முதல் போட்டியில் ஸ்மித், லபுஷேன், கிரீன், ஸ்டார்க் மற்றும் நேதன் லயன் ஆகியோர் விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.

யார் இவர்? மேற்கிந்தியத் தீவுகளின் கயானா பகுதியில் உள்ள குக்கிராமத்தை சேர்ந்தவர். அவரது கிராமத்துக்கு செல்ல வேண்டுமென்றால் இரண்டு நாட்கள் படகில் பயணிக்க வேண்டும். பராகரா (Baracara) எனும் கிராமத்தை சேர்ந்தவர். 2018 வரையில் இந்த கிராமத்தில் முறையான தொலைத்தொடர்பு அல்லது இணைய சேவை இல்லமால் இருந்துள்ளதாக தகவல். மொத்தமே 350 பேர் வசிக்கும் நிலம். அவருடன் பிறந்தவர்கள் ஐந்து சகோதரர்கள் மற்றும் 3 சகோதரிகள்.

தனது கிராமத்து வீதிகளில் கிரிக்கெட் விளையாடுவது தான் அவருக்கான பொழுதுபோக்கு. மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர்கள் அம்ப்ரோஸ் மற்றும் வால்ஷ் தான் அவரது ரோல் மாடல். இருந்தும் குடும்ப சூழல் காரணமாக இரவு நேர காவலாளியாக அவர் பணியாற்றி வந்துள்ளார். அவரது வருமானத்தின் மூலம் குடும்பத்திற்கும், தனது 2 வயது பிள்ளைக்கும் உதவியுள்ளார். இருந்தும் தனது கிரிக்கெட் கனவை அவர் விடவே இல்லை.

கடந்த ஆண்டு ஜனவரியில் தொழில்முறை கிரிக்கெட்டர் ஆகும் முடிவுடன் பார்த்து வந்த வேலைக்கு விடை கொடுத்துள்ளார். செகண்ட் டிவிஷன் மற்றும் ஃபர்ஸ்ட் டிவிஷன் கிரிக்கெட் விளையாடி உள்ளார். அப்படியே தனக்கு தெரிந்த கிரிக்கெட் நண்பரான ரொமாரியோ ஷெப்பர்ட் மூலம் கயானா அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார். அப்படி தனக்கு வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் எல்லாம் தனது பவுலிங் திறனை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார். அதன் மூலம் கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்கா பயணம் செய்த மேற்கிந்தியத் தீவுகளின்-ஏ அணியில் இடம் பிடித்துள்ளார். அங்கும் தனது திறனை நிரூபித்து தேர்வுக்குழுவின் கவனத்தை ஈர்த்தார். தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அறிமுக வீரராக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். இவர் ரைட்-ஆர்ம் வேகப்பந்து வீச்சாளர். மணிக்கு 140 கி.மீ வேகத்தில் ஷார்ட் பிட்ச் டெலிவரியை தொடர்ந்து வீசும் திறன் கொண்டவர். அறிமுக டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்களை கைப்பற்றிய 10-வது மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பவுலராக இணைந்துள்ளார். ஸ்மித் விக்கெட்டை வீழ்த்தியது அல்டிமேட் என அவர் தெரிவித்துள்ளார்.

அடிலெய்ட் டெஸ்ட்: 17-ம் தேதி தொடங்கிய அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் டாஸை இழந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 188 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 283 ரன்கள் எடுத்தது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இரண்டாவது இன்னிங்ஸில் 22 ரன்கள் பின்தங்கிய நிலையில் 73 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது மேற்கிந்தியத் தீவுகள் அணி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்