“ரோகித் 2-வது சூப்பர் ஓவரில் ஆடியிருக்கக் கூடாது” - பார்த்திவ் படேல் குறிப்பிடும் ‘விதி’

By செய்திப்பிரிவு

பெங்களூரு: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இரண்டு சூப்பர் ஓவர்களில் விளையாடி வெற்றி பெற்றது. இதில் முதல் சூப்பர் ஓவரின் கடைசி பந்தில் தானாக வெளியேறி இருந்தார் இந்திய கேப்டன் ரோகித் சர்மா. ஆனால், அவர் இரண்டாவது சூப்பர் ஓவரில் மீண்டும் பேட் செய்திருந்தார். அது சரியா, தவறா என்ற விவாதம் எழுந்துள்ளது.

இந்தச் சூழலில் அது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பார்த்திவ் படேல். “முதல் சூப்பர் ஓவரை பார்க்கையில் ரோகித் சர்மா ரிட்டையர் அவுட் முறையில் வெளியேறினார் என்று தெரிகிறது. அவர் ரிட்டையர் ஹெர்ட் முறையில் வெளியேறவில்லை. அதனால் அவர் 2-வது சூப்பர் ஓவரில் பேட் செய்திருக்க கூடாது. அதனை போட்டியின் நடுவர்கள் மிஸ் செய்துவிட்டனர் என நான் கருதுகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

எம்சிசி பிளேயிங் கண்டிஷன்ஸ் கூற்றின் படி விதி எண் 25.4.2 கீழ் ஒரு பேட்ஸ்மேன் இயலாமை, காயம் அல்லது வேறு சில காரணங்களால் இன்னிங்ஸ் ஆடிக்கொண்டிருந்தபோது ரிட்டையர் ஆனால் அவர் மீண்டும் இன்னிங்ஸை தொடங்கலாம். மேற்கூறிய காரணங்கள் இல்லாமல் பேட்ஸ்மேன் ரிட்டையர் ஆனால், அவர் ‘ரிட்டையர் அவுட்’ என பதிவு செய்யப்படும்.

விதி எண் 25.4.3 கீழ் ரிட்டையர் ஹெர்ட் ஆன பேட்ஸ்மேன் எதிரணியின் கேப்டன் அனுமதியுடன் மீண்டும் பேட் செய்யலாம். ரிட்டையர் அவுட் ஆன பேட்ஸ்மேன் மீண்டும் இன்னிங்ஸை தொடர முடியாது என தெரிவித்துள்ளது.

இரண்டு சூப்பர் ஓவர்களில்பேட் செய்த ரோகித் சர்மா முறையே 13 மற்றும் 11 ரன்கள் எடுத்திருந்தார். முன்னதாக, முதல் இன்னிங்ஸில் 121 ரன்கள் குவித்திருந்தார். இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியுடன் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE