AUS vs WI முதல் டெஸ்ட் | 188 ரன்களுக்கு சுருண்டது மேற்கு இந்தியத் தீவுகள் அணி

By செய்திப்பிரிவு

அடிலெய்டு: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 188 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அடிலெய்டு நகரில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணியானது 62.1 ஓவரில் 188 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக கிர்க் மெக்கென்சி 94 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் சேர்த்தார்.

கேப்டன் கிரெய்க் பிராத்வெயிட் 13, தகேநரைன் சந்தர்பால் 6, அலிக் அத்தானஸ் 13, கவேம் ஹாட்ஜ் 12, ஜஸ்டின் கிரீவ்ஸ் 5, ஜோஸுவா டி சில்வா 6, அல்சாரி ஜோசப் 14, குடகேஷ் மோதி 1 ரன்களில் நடையை கட்டினார். கடைசி விக்கெட்டுக்கு களமிறங்கிய ஷாமர் ஜோசப் 41 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் சேர்த்தார்.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஜோஷ் ஹேசில்வுட், பாட் கம்மின்ஸ் ஆகியோர் தலா 4 விக்கெட்களையும் மிட்செல் ஸ்டார்க், நேதன்லயன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதையடுத்து பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 21 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 59 ரன்கள் எடுத்தது. முதன்முறையாக தொடக்க வீரராக களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் 12 ரன்களில் ஷாமர் ஜோசப் பந்தில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து களமிறங்கிய மார்னஷ் லபுஷேனை 10 ரன்களில் வெளியேற்றினார் ஷாமர் ஜோசப். உஸ்மான் கவாஜா 30, கேமரூன் கிரீன் 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இரண்டாம் நாள் ஆட்டத்தின் உணவு நேர இடைவேளையின் போது 5 விக்கெட்கள் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்துள்ளது ஆஸ்திரேலியா. கிரீன் 14 ரன்கள், கவாஜா 45 ரன்கள் மற்றும் மிட்செல் மார்ஷ் 5 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE