16 சிக்சர்களுடன் பாகிஸ்தான் பவுலிங்கை புரட்டி எடுத்த ஃபின் ஆலன்: டி20 தொடரை வென்றது நியூசிலாந்து

By ஆர்.முத்துக்குமார்

ஷாஹின் ஷா அஃப்ரிடியின் முதல் கேப்டன்சி தொடரே பாகிஸ்தானின் தொடர் சொதப்பல் தோல்வியில் முடிந்துள்ளது. டியுனெடின் மைதானத்தில் இன்று நடைபெற்ற 3-வது டி20 போட்டியில் நியூஸிலாந்து வீரர் ஃபின் ஆலன் 62 பந்துகளில் 5 பவுண்டரிகள் 16 சிக்சர்களுடன் 137 ரன்கள் விளாசித்தள்ள 20 ஓவர்களில் நியூஸிலாந்து 3வது முறையாக இதே தொடரில் 200 ரன்களைக் கடந்து 224 ரன்களைக் குவித்தது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 7 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை எடுத்து தோல்வி அடைந்ததோடு தொடரையும் 3-0 என்று இழந்துள்ளது.

ஷாஹின் அஃப்ரிடி டாஸ் வென்று முதலில் நியூஸிலாந்தை பேட் செய்ய அழைத்து பெரும் தவறு செய்தார். ஃபின் ஆலன் அடித்தால் பந்து மைதானத்திற்கு வெளியேதான் செல்கிறது. பாக். வீரர்கள் அண்ணாந்து பார்த்துப் பார்த்து கழுத்து வலி கண்டிருப்பர். மைதானத்தில் ஓடிய ஓட்டத்தை ரோடில் ஓடியிருந்தால் அவர்கள் பாகிஸ்தானுக்கே கூட வந்திருக்கலாம். அந்த ஒரு அடி ஃபின் ஆலனுடையது என்றால் மிகையாக இருந்தாலும் நிஜம்தான்.

இந்த சாதனை இன்னிங்ஸ் மூலம் நியூஸிலாந்தின் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் பிரெண்டன் மெக்கல்லம் டி20 போட்டியில் எடுத்த 123 ரன்கள் என்ற அதிகபட்ச ஸ்கோர் நியூஸிலாந்து சாதனையை முறியடித்தார் ஃபின் ஆலன். ஹங்கேரி வீரர் சீஷான் குகிகேல் எடுத்த டி20 சர்வதேச ஸ்கோரான 137 ரன்களுடன் இணைந்த சாதனை இன்னிங்ஸ் ஆகும் ஃபின் ஆலனுடையது. டி20யில் அதிகபட்ச ஸ்கோருக்கான சாதனையை ஆப்கான் வீரர் ஹஸ்ரத்துல்லா சசாய் வைத்துள்ளார். இவர் அயர்லாந்துக்கு எதிராக 62 பந்துகளில் 162 ரன்கள் விளாசியது இன்று வரை உலக சாதனையாக இருந்து வருகிறது. அடுத்த அதிகபட்ச ஸ்கோர் ஏரோன் பிஞ்ச் - 172. மூன்றாவது அதிகபட்ச ஸ்கோரும் பிஞ்ச்தான் - 156.

ஃபின் ஆலனின் இந்த ஆக்ரோஷத்திற்கு பாகிஸ்தானின் படுமட்டமான ஷார்ட் பிட்ச் பவுலிங்கும் காரணம். புல் ஷாட்களில் வெளுத்து வாங்கி விட்டார் ஃபின் ஆலன், பிறகு பேஸ்பால் விளையாட்டில் அடிப்பது போலவும் கால்ஃப் ஆட்டத்தில் அடிப்பது போலவும் நேராக வெளுத்து வாங்கிய ஷாட்கள் என்று ஷாட்கள் பலரகம். 26 பந்துகளில் அரைசதம் கண்ட ஃபின் ஆலன் 48 பந்துகளில் சதம் கண்டார்.

இவருக்கு அடுத்த படியாக டிம் செய்பர்ட் 31 ரன்களையும் கிளென் பிலிப்ஸ் 19 ரன்களையும் எடுத்தனர் மற்றெல்லோரும் ஒற்றை இலக்கமே. நியூசிலாந்து 224/7. பாகிஸ்தான் தரப்பில் எல்லோருக்கும் சாத்து. ஷாஹின் அப்ரீடி 44 ரன்களுக்கு 1 விக்கெட், ஹாரிஸ் ராவுஃப்பை பிய்த்து உதறிவிட்டனர். அவர் 4 ஓவர் 60 ரன்கள் 2 விக்கெட்.

இலக்கை விரட்டும் போது முகமது ரிஸ்வான் 2 சிக்சர்களுடன் 24 ரன்களை எடுத்து பாபர் அசாமுக்கு கொஞ்சம் சப்போர்ட் செய்தார். ஆனால் அவர் சாண்ட்னரிடம் ஆட்டம் இழந்த பிறகு ஒரு பாகிஸ்தான் வீரரும் 15 பந்துகளுக்கு மேல் தாங்கவில்லை, பாபர் அசாம் மட்டும் 37 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் 179/7 என்று தோற்றது.

நியூசிலாந்து தரப்பில் சவுதி 29 ரன்களுக்கு 2 விக்கெட். மற்றபடி ஹென்றி, லாக்கி பெர்கூசன், சாண்ட்னர், இஷ் சோதி தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர். ஆட்ட நாயகன் ஃபின் ஆலன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE