ஆப்கானிஸ்தானுடன் இன்று மீண்டும் மோதல்: டி 20 தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி

By செய்திப்பிரிவு

இந்தூர்: இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டி இந்தூரில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இருஅணிகள் இடையிலான 3 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. மொகாலியில்நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் 2-வது ஆட்டம்இந்தூரில் இன்று இரவு நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணி டி 20 தொடரை கைப்பற்றும்.

விராட் கோலி அணிக்கு திரும்பிஉள்ளதால் திலக் வர்மா தனது இடத்தை இழக்கக்கூடும். திலக்வர்மா, மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான தனது அறிமுக தொடரில் அபாரமாக விளையாடி கவனம் ஈர்த்திருந்தார். ஆனால் அதன் பின்னர் அவர், பங்கேற்ற 13இன்னிங்ஸில் ஒரே அரை சதம் மட்டுமே எடுத்தார். ஆசிய விளையாட்டிலும் அவர், பெரியஅளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

முதல் ஆட்டத்தில் ஆல்ரவுண்டராக சிறப்பான திறனை வெளிப்படுத்திய ஷிவம் துபேவிடம் இருந்துமீண்டும் ஒரு சிறந்த இன்னிங்ஸ்வெளிப்படக்கூடும். அதேவேளையில் ரோஹித் சர்மா, ஷுப்மன் கில்ஆகியோர் பார்முக்கு திரும்புவதில்கவனம் செலுத்தக்கூடும். பந்து வீச்சில் முகேஷ் குமார், அக்சர் படேல்ஆகியோரிடம் இருந்து மேம்பட்டதிறன் வெளிப்படக்கூடும். ஆப்கானிஸ்தான் அணி இன்றைய ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் தொடரை இழக்க நேரிடும். இதனால் கூடுதல் கவனத்துடன் செயல்பட்டு இந்திய அணிக்கு அழுத்தம் கொடுக்க அந்த அணி முயற்சி செய்யக்கூடும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE