IND vs ENG டெஸ்ட் தொடர் | முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு: துருவ் ஜுரலுக்கு வாய்ப்பு

By செய்திப்பிரிவு

மும்பை: இங்கிலாந்து கிரிக்கெட் அணியுடனான டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் தலைமையிலான அணியின் பும்ரா துணை கேப்டனாக செயல்பட உள்ளார். அதே நேரத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷானுக்கு அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இளம் வீரர் துருவ் ஜுரல் டெஸ்ட் கிரிக்கெட் அணியில் முதல் முறையாக வாய்ப்பு பெற்றுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. கடந்த 2021-ல் இங்கிலாந்து அணி இந்தியா வந்து விளையாடிய போது டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் தொடர்களை இழந்திருந்தது. அதன்பிறகு அந்த அணியின் டெஸ்ட் கிரிக்கெட் பாணி முற்றிலும் மாற்றம் கண்டது. பாஸ்பால் அணுகுமுறை மூலம் அந்த அணி அதகளம் செய்து வருகிறது. இந்த சூழலில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 25-ம் தேதி தொடங்க உள்ளது.

இந்த தொடருக்கான முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். இஷான் கிஷன், ஷமி போன்ற வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இந்திய அணி சுழற்பந்து வீச்சை அதிகம் நம்பி களம் காண உள்ளது. அஸ்வின், ஜடேஜா, அக்சர் மற்றும் குல்தீப் என நான்கு பிரதான சுழற்பந்து வீச்சாளர்கள் அணியில் அங்கம் வகிக்கின்றனர்.

அணி விவரம்: ரோகித் சர்மா (கேப்டன்), ஷூப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), கே.எஸ் பரத் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜுரல் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), அவேஷ் கான்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE