ஒலிம்பிக் போட்டிக்கு ரிதம் சங்க்வான் தகுதி: முதன்முறையாக 16 பேர் தகுதி பெற்று சாதனை

By செய்திப்பிரிவு

ஜகார்த்தா: பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான துப்பாக்கி சுடுதல் ஆசிய தகுதி சுற்று இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ரிதம் சங்க்வான் இறுதிப் போட்டியில் 28 புள்ளிகள் சேர்த்து வெண்கலப் பதக்கம் வென்றார். கொரியாவைச் சேர்ந்த யங் ஜின் 41 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துதங்க பதக்கமும் அதே நாட்டைச் சேர்ந்த மற்றொரு வீராங்கனையான கிம் யெஜி 32 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும் பெற்றனர்.

இந்த பிரிவில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இரு வீராங்கனைகள் தேர்வு செய்யப்படுவார்கள். கொரியாவை சேர்ந்த இரு வீராங்கனைகள் ஏற்கெனவே இந்த பிரிவில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தனர். இதனால் யங் ஜின்,கிம் யெஜி ஆகியோர் பதக்கத்துக்காக மட்டுமே இந்த போட்டியில் விளையாடினார்கள். இதனால் 3-வது இடம் பிடித்த இந்தியாவின் ரிதம் சங்க்வானும், சீன தைபேவை சேர்ந்த வூ சியா யிங்கும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்கள்.

இதுவரை பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு துப்பாக்கி சுடுதலில் இந்தியாவில் இருந்து 16 பேர் தகுதிபெற்றுள்ளனர். இந்த வகையில் இது சாதனையாக அமைந்துள்ளது. இதற்கு முன்னர் அதிகபட்சமாக 2020-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதலில் இந்தியாவில் இருந்து 15 பேர் பங்கேற்றிருந்தனர். இந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE