IND vs AFG முதல் டி20 | மிரட்டிய துபே: இந்திய அணி வெற்றி!

By செய்திப்பிரிவு

மொகாலி: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் ஷிவம் துபே பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

3 டி20 கிரிக்கெட் போட்டி கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஆப்கானிஸ்தான் அணி, இந்தியா வந்துள்ளது. இரு அணிகள் இடையே குறுகிய வடிவிலான இருதரப்பு தொடர் நடைபெறுவது இதுவே முதன்முறையாகும். இந்த தொடரின் முதல் ஆட்டம் இன்று மொகாலியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.

ஆப்கானிஸ்தான் அணிக்காக குர்பாஸ் மற்றும் ஸத்ரான் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் கண்டனர். இருவரும் இணைந்து 50 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். குர்பாஸ் 23 ரன்களிலும், ஸத்ரான் 25 ரன்களிலும் வெளியேறினர். இருவரும் அடுத்தடுத்து சில பந்துகள் இடைவெளியில் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து ரஹமத் 3 ரன்களில் அவுட் ஆனார்.

பின்னர் அஸ்மதுல்லா மற்றும் முகமது நபி இணைந்து 68 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருந்தும் ஒரே ஓவரில் இருவரும் ஆட்டமிழந்தனர். அஸ்மதுல்லா 29 ரன்கள், நபி 42 ரன்கள் எடுத்திருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது ஆப்கன் அணி. 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது. கேப்டன் ரோகித் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

கில், 12 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா மற்றும் ரிங்கு சிங் என அடுத்த பேட் செய்ய வந்த மூன்று பேருடனும் தலா 40+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தார் ஷிவம் துபே. திலக் வர்மா 26, ஜிதேஷ் 31 மற்றும் ரிங்கு 16* (நாட்-அவுட்) ரன்கள் எடுத்திருந்தனர். இறுதி வரை விளையாடிய துபே 40 பந்துகளில் 60 ரன்கள் எடுத்திருந்தார். 5 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் இதில் அடங்கும். டி20 கிரிக்கெட்டில் அவரது 2-வது அரைசதம் இது. முதல் இன்னிங்ஸில் 2 ஓவர்கள் வீசி 9 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் கைப்பற்றி இருந்தார்.

17.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது இந்தியா. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. அடுத்த போட்டி வரும் ஞாயிறு அன்று இந்தூரில் நடைபெறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE