பண்ணையில் இருந்து ரஞ்சி கிரிக்கெட் வரை உயர்ந்த கவுரவ் யாதவ்!

By ஆர்.முத்துக்குமார்

கவுரவ் யாதவ் இவரது பெயர் இப்போதுதான் கிரிக்கெட் உலகில் வெளியே தெரியவந்துள்ளது. அதுவும் டெல்லி அணியை அதன் சொந்த மண்ணில் புதுச்சேரி அணி மண்ணைக் கவ்வச் செய்தது முதல் கவுரவ் யாதவ் பிரபலமாகியுள்ளார். டெல்லியை கவிழ்த்து 10 விக்கெட்டுகளை வீழ்த்தியதால், யார் இந்த கவுரவ் யாதவ் என்ற ஆர்வம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. இவர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். வயது 32 ஆகிவிட்டது. வலது கை வேகப்பந்து வீச்சாளர். நல்ல திறமை இருந்தும் சரியான கதவுகள் திறக்கப்படாமல் இப்போதுதான் இவர் பவுலிங் திறமை வெளிப்பட்டுள்ளது. ஆனால் இவரது பயணம் கடினமான பாதையைக் கொண்டது.

மத்திய பிரதேச கிராமம் ஒன்றில் பண்ணையில் வேலை செய்து வந்தவர். 21 வயதாக இருக்கும் போது கிரிக்கெட் ஆசை துளிர்விட தன் தந்தையிடம் கூறியிருக்கிறார். இவர் கிரிக்கெட்டின் எந்த ஒரு படிநிலையிலும் ஆடி வரவில்லை. ஆனால் வேகமாக வீச வேண்டும் என்ற ஆர்வம் மட்டும்தான் அவருக்கு அந்த வயதில் இருந்தது. இந்தூரில் வந்து விசாரித்துப் பார்த்தார். நேரடியாக ஆட முடியாது என்பதுதான் பதிலாக இருந்தது.

இவரது திறமையை டென்னிஸ் பந்து கிரிக்கெட்டில் முதன் முதலில் பார்த்து அறிந்தவர் முன்னாள் இந்திய லெக் ஸ்பின்னர் நரேந்திர ஹிர்வாணி. அப்போது ஹிர்வாணி மத்திய பிரதேச கிரிக்கெட் சங்க தேர்வுக்குழு தலைவராக இருந்தார். யு-25 அணியில் அவரை இறக்கினார் ஹிர்வாணி. அதன் பலன் மும்பை அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அடுத்த வாரமே குஜராத்திற்கு எதிரான ரஞ்சிப் போட்டியில் அறிமுகமாகிவிட்டார். இது 2012-ல் நடக்கிறது. அறிமுகப் போட்டி சரியாக அமையவில்லை. ஒரு விக்கெட்டைத்தான் அவரால் கைப்பற்ற முடிந்தது.

மேலும் வேகமாக வீசும் தன் முயற்சியில் காயங்கள் அடைந்ததால் அவரது கிரிக்கெட் கரியர் தடைப்பட்டது. இதிலிருந்து மீண்டு அணிக்குள் திரும்பி வந்தால் மீண்டும் பைக் விபத்தில் காயமடைந்தார். இன்னொரு முறை ரஞ்சி சீசன் தொடங்கும் முன்னர் சிக்குன்குனியாவினால் அவதிப்பட்டார். 11 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் 31 முதல் தரப்போட்டிகளில்தான் ஆடியுள்ளார். 23 லிஸ்ட் ஏ போட்டிகள், 14 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார்.

ஆனால் இவரது விடா முயற்சியும் கடின உழைப்பும் வீண் போகவில்லை. 2021-22 ரஞ்சி சீசனில் மத்திய பிரதேசம் ரஞ்சி சாம்பியன் ஆனதில் இவரது பங்களிப்பு அபரிமிதமானது. அந்த சீசனில் 5 போட்டிகளில் 23 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் கவுரவ் யாதவ்.

ஆனால் அதன் பிறகு அவருக்கு வாய்ப்புகள் அவ்வளவு சுலபமாகக் கிடைக்கவில்லை. அவர் கிரிக் இன்போ இணையதளத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறும்போது, “கடந்த சீசனில் ஆந்திராவுக்கு எதிராக காலிறுதியில் நன்றாக வீசினேன். ஆனால் மீண்டும் காயமடைந்தேன். சந்திரகாந்த் பண்டிட் சார் அரையிறுதியில் நான் ஆட வேண்டும் என்று வற்புறுத்தினார். அரையிறுதியில் பெங்கால் அணியிடம் தோல்வி அடைந்து வெளியேறிவிட்டோம். எனக்கு அரையிறுதி சரியான போட்டியாக அமையவில்லை. ஆனால் மீண்டும் இரானி கோப்பை வரும்போது என் காயம் அதிகரித்தது. 31 வயதில் அணியில் ரெகுலரான ஒரு வீரராக நான் இல்லை. என்னை ஒரு ஃபார்மேட் பவுலர் என்று முத்திரைக் குத்திவிட்டனர். இதனால் வெள்ளைப் பந்தில் நிரூபிக்க அதிக வாய்ப்பில்லாமல் போய்விட்டது. அப்போதுதான் நினைத்தேன் மத்தியப் பிரதேச அணியிலிருந்து வேறு அணிக்கு மாற வேண்டும் என்று” என கூறியுள்ளார்.

இவரது மத்தியப் பிரதேச சகாவும் ஐபிஎல் நட்சத்திர வீரரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான வெங்கடேஷ் அய்யர் இவரை புதுச்சேரி அணிக்கு பரிந்துரை செய்தார். புதுச்சேரி அணிக்கு வந்தவுடனேயே நடப்பு ரஞ்சி ஒப்பனரில் டெல்லி அணிக்கு எதிராக 10 விக்கெட்டுகளைச் சாய்த்து டெல்லி அணியை அதன் சொந்த மண்ணிலேயே தோற்கடிக்கச் செய்தார். மத்தியப் பிரதேசத்திலிருந்து வந்து முதல் போட்டியில் புதுச்சேரிக்காக ஆடினார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் நெட் பவுலராகத் தேர்வு ஆனார். “எனது ஒன்றிரண்டு நெட் பவுலிங்கில் விராட் கோலி என் பவுலிங்கை ஆர்வமாக நோக்கினார், அவரை என் பவுலிங் கவர்ந்தது” என்று கிரிக் இன்போ பேட்டியில் பெருமிதத்துடன் கூறுகிறார் கவுரவ் யாதவ். அதாவது நெட் செஷன் முடிந்து இவர் உட்கார்ந்திருக்கிறார், அப்போது கோலியே தன்னிடம் வந்து பேசியதாகக் கூறினார். “அவரது வார்த்தைகள் பெரும் ஊக்கமளித்தன. என் நம்பிக்கையை அதிகரித்தது” என்கிறார் கவுரவ் யாதவ்.

தகவல்கள்: ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்