இந்தியா - தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் போட்டி நடந்த கேப்டவுன் பிட்ச் திருப்தியற்றது: ஐசிசி தர நிர்ணயம்

By செய்திப்பிரிவு

துபாய்: இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நடந்த கேப்டவுன் பிட்ச் திருப்தியற்றது என ஐசிசி தர நிர்ணயம் செய்துள்ளது.

நடந்து முடிந்த கேப்டவுன் டெஸ்ட் போட்டி கிரிக்கெட் வரலாற்றில் மிக துரிதமாக முடிவடைந்த போட்டி என்ற சாதனையை நிகழ்த்தியது. கேப்டவுனில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டி, ஆட்டத்தின் முதல் நாளே 23 விக்கெட்கள் சரிந்தன. ஒட்டுமொத்த போட்டியும் நான்கரை செஷன்களில் முடிவடைந்தன. இந்த ஆட்டத்தில் மொத்தம் 642 பந்துகளே வீசப்பட்டது. இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் மிக குறைந்த பந்துகளில் முடிவடைந்த போட்டியாக இது அமைந்தது. அதற்கு காரணம் மோசமான கேப்டவுன் பிட்ச்தான். கேப்டவுன் பிட்ச் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக திகழ்ந்தது சர்ச்சைக்குள்ளானது.

“பிட்ச்களின் தரத்தை மதிப்பீடு செய்வதில் ஐசிசியும் அதன் ஆட்ட நடுவர்களும் ஏன் இரட்டை நிலைப்பாடு கொள்கின்றனர், பாரபட்சம் பார்க்கின்றனர்? இது ஏன் என்று தெரியவில்லை” என இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கேள்வி எழுப்பியிருந்தார். அவர் மட்டுமல்ல, தென் ஆப்பிரிக்கா டீன் எல்கர் பிட்ச்சின் தன்மையை குறித்து முதல் நாள் முடிவிலேயே அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில், ஐசிசி நடுவர் கிறிஸ் பிராட் கேப்டவுன் பிட்ச்க்கான தனது மதிப்பீட்டை அறிவித்துள்ளார். அதன்படி, கேப்டவுன் பிட்ச் திருப்தியற்றது என தர நிர்ணயம் செய்துள்ளார். கிறிஸ் பிராட் இது தொடர்பாக விடுத்துள்ள குறிப்பில், "இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது மிகவும் கடினமாக இருந்தது. போட்டி முழுவதும் பந்து விரைவாகவும், சில சமயங்களில் பயமுறுத்தும் விதமாகவும் எழும்பியது. இதனால் ஷாட்களை விளையாடுவது கடினமாக இருந்தது. பல பேட்டர்கள் அடிபட்டனர். மேலும் மோசமான பவுன்ஸ் காரணமாக பல விக்கெட்டுகளும் விழுந்தன" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE