ஆஸ்திரேலியாவுடன் இன்று மோதல்: டி20 தொடரை வெல்லுமா இந்திய மகளிர் அணி?

By செய்திப்பிரிவு

நவி மும்பை: இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது டி 20 கிரிக்கெட் போட்டி நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் இன்று இரவு 7மணிக்கு நடைபெறுகிறது.

இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 142 ரன்கள்இலக்கை 17.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி கண்டது.இந்த தோல்விக்கு ஆஸ்திரேலிய அணி 2-வது ஆட்டத்தில் பதிலடி கொடுத்தது. அந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் 3 ஆட்டங்கள் கொண்ட தொடர் 1-1 என சமநிலையை எட்டியது.

இந்நிலையில் தொடரை வெல்வது யார் என்பதை தீர்மானிக்கும் ஆட்டமாக அமைந்துள்ள கடைசி போட்டி இன்று இரவு 7 மணிக்கு நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெறுகிறது. இதுவரை இந்திய அணி தனது சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்றுள்ள இருதரப்பு டி 20 தொடரை வென்றது இல்லை. இதற்கு இம்முறை தீர்வு காண்பதில் இந்திய அணி வீராங்கனைகள் முயற்சி செய்யக்கூடும்.

இரு ஆட்டங்களிலும் 2-வது பேட் செய்தஅணிகளே வெற்றி கண்டன. ஏனெனில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் ஆடுகளத்தில் இலக்கை துரத்துவது எளிதாக இருந்தது. இதனால் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வெல்லும் அணி பீல்டிங்கையே தேர்வு செய்யக்கூடும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE