இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய பேட்டிங் போராட்டமின்றி சரணாகதி அடைவதற்கு பல காரணங்களில் பிரதானமாகக் கூறப்படுவது நல்ல பந்து வீசப்படுகிறது என்பதும் கூறப்படுகிறது.
விராட் கோலி, புஜாராவை முன் வைத்து இத்தகைய வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. முதலில் நல்ல பந்து ஏன் வீச அனுமதிக்கப்படுகிறது என்ற கேள்வியை நாம் ஒரு புறம் வைத்துக் கொள்வோம்.
கிரிக்கெட்டில் ஆடமுடியாத, மிகச்சிறந்த பந்துகளுக்கு எப்போதும் அவ்வளவாக விக்கெட்டுகள் விழுவதில்லை. குறிப்பாக வேகப்பந்துக்குச் சாதகமான ஆட்டங்களில் பந்தைச் சரியாகக் கணிக்க முடியாமல் பந்து மட்டையைக் கடந்து நூலிழையில் எட்ஜைத் தவறவிட்டுச் செல்லும்போது அது குட் பால் என்று கூறப்படுகிறது. ஆனால் அந்தப் பந்தை கணித்து ஆடாமல் விடும் போது அது சாதாரணப் பந்தாகவே இருந்து விடுகிறது.
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத் அபாயகரமான பல பந்துகளை, விக்கெட்டுகளை வீழ்த்தும் அச்சுறுத்தலான பல பந்துகளை உலகின் மிகச்சிறந்த தொடக்க வீரர்களுக்கு வீசியுள்ளார். ஆனால் விக்கெட்டுகள் அவருக்கு அந்தப் பந்துகளில் கிடைத்ததில்லை. மாறாக அந்த நல்ல பந்தை எதிர்நோக்கியே அச்சப்படும் பேட்ஸ்மென்கள் சாதாரண பந்தை சொதப்பலாக விளையாடி அவுட் ஆகிவிடுவார்கள்.
கிளென் மெக்ரா அதிகப்படியான விக்கெட்டுகளைக் குவித்தது நல்ல பந்துகளில் அதிகம் அல்ல என்பதும் நாம் அவரது பந்து வீச்சை வீடியோ ஆய்வு செய்தால் தெரியவரும். அதேபோல் ஷேன் வார்ன் எடுத்த பாதி விக்கெட்டுகள் பேட்ஸ்மெனை மனரீதியாகக் குழப்பிவிட்டு எடுக்கப்பட்டவையே. காரணம் அவரது அந்த பெரிய ஸ்பின் பந்து விழுந்து விடும் என்ற அச்சத்தில் அவரது நேர் பந்துகளை ஆடாமல் விட்டு, அல்லது தவறாக ஆடி அவுட் ஆன வீரர்களே அதிகம்.
இங்குதான் சச்சின் டெண்டுல்கரின் திறமையை நாம் விதந்தோத வேண்டிய நிலை ஏற்படுகிறது. அவர் ஷேன் வார்னின் பந்துகளை எதிர்கொள்ள சிறப்பு பயிற்சியே எடுத்துக் கொண்டார். அதன் விளைவுதான் அவர் ஒரு தொடர் முழுதும் பின்னி எடுத்தார். ஷேன் வார்னை சகல விதமாகவும் அவரால் ஆட முடிந்தது. மேலேறி வந்து தூக்கி அடித்தல் அல்லது ஸ்வீப், அல்லது ஸ்லாக் ஸ்வீப், விக்கெட் கீப்பர் பின்னால் பெடல் ஷாட் ஆடுவது, ஒதுங்கிக் கொண்டு எக்ஸ்ட்ரா கவரில் அடிப்பது பின்னால் சென்று கட், மற்றும் புல் ஆடுவது என்று சகல ஷாட்களையும் அவர் வார்ன் பந்துகளில் அடித்துள்ளார்.
வார்ன் அப்போது நல்ல பந்துகளை வீசவில்லையா? வீசினார். ஆனால் அது மிகநல்ல பந்தாக விடாமல் சச்சின் ஆடியதுதான் ஆதிக்கத்திற்குக் காரணம்.
ஆலன் டோனல்ட் உள்ளிட்ட தென் ஆப்பிரிக்க பவுலர்கள் ஆஸ்திரேலியாவின் சிறந்த பேட்டிங் வரிசைக்கு அச்சுறுத்தல் தொடுத்தபோது ஸ்டீவ் வாஹ், கிரெக் ப்ளூவெட், டேமியன் மார்ட்டின், கில்கிறிஸ்ட் ஆகியோர் பின்னி எடுத்தனர், காரணம் நல்ல பந்துகளை அவர்களை வீச விடாமல் செய்தது.
மிகச்சிறந்த இந்திய உதாரணம் விரேந்திர சேவாக்:
சேவாக் ஏன் பெரிய பேட்ஸ்மென் என்றால், அவர் பவுலர்களை நல்ல பந்துகளை வீச அனுமதிக்க மாட்டார். எப்போது கங்குலி சேவாகைத் துவக்க வீரராகக் களமிறக்கினாரோ அதன் பிறகே 1ஆம் நிலையில் களமிறங்கிய திராவிட் பெரிய அளவுக்கு இந்திய அணிக்காக பல டெஸ்ட் இன்னிங்ஸ்களை ஆடியிருக்கிறார் என்பதைப் புள்ளி விவரங்களைக் கொண்டு சுலபமாக நிறுவ முடியும்.
2004ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா தொடரில் சேவாக் ஒரு 40 அல்லது 45 ரன்களை விரைவில் அடித்த பிறகு திராவிட் களமிறங்குவார் பவுலர்கள் சேவாகிற்கு வீசிவிட்டு திராவிடிற்கு வீச வரும்போது திண்டாடினர். அப்படிப்பட்ட ஒரு டெஸ்ட் போட்டியில்தான் அடிலெய்டில் திராவிட் முதல் இன்னிங்ஸில் 233 ரன்களையும் இரண்டாவது இன்னிங்சில் 78 நாட் அவுட் என்று எடுத்து இந்தியாவை அரிய ஒரு வெற்றிக்கு இட்டுச் செல்ல முடிந்துள்ளது.
அதே போல் பாகிஸ்தானில் சேவாகுடன் தொடக்க வீரராகக் களமிறங்கிய திராவிட் அவருடன் இணைந்து சதமெடுக்க இருவரும் இணைந்து 400 ரன்களுக்கும் மேல் சேர்த்தனர்.
இலங்கையில் ஒரு டெஸ்ட் போட்டியில் அஜந்தா மெண்டிஸின் புதிர் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் சச்சின், திராவிட், லஷ்மண், கங்குலி என்று பெரும் தலைகள் சொற்ப ரன்களில் வெளியேற சேவாக் மட்டும் ஒருமுனையில் அனைத்துப் பந்துகளையும் சாத்தி எடுத்து இரட்டைச் சதம் கண்டு கடைசி வரை ஆட்டமிழக்கவேயில்லை.
திராவிடின் எழுச்சி பற்றி பேசும்போது நாம் சேவாகின் பங்கை மறந்துவிடலாகாது.
கோலி, தவான், புஜாரா ஆகியோரது பிரச்சனைகள் என்ன?
கோலி பேட்டிங் உத்தி ஐபிஎல் பாணியில் உள்ளது. தென் ஆப்பிரிக்காவில் ஆடினாரே, நியூசிலாந்தில் ஆடினாரே என்று கேட்கலாம். தவானுக்கும் இது பொருந்தும். ஆனால் தென் ஆப்பிரிக்காவில் ஏறக்குறைய இந்தியா பாணி களம் அமைக்கப்பட்டதே அங்கு அவர் சோபித்ததற்குக் காரணம். ஆனால் ஜோகன்னஸ்பர்கில் முதல் நாளில் ஸ்டெய்ன், மோர்கெலுக்கு எதிராக சதம் எடுப்பது சாதாரண விஷயமல்ல. அங்கு அவர் ஷைன் ஆனதற்குக் காரணம் அவரது பலவீனமான பகுதிகளில் பீல்டிங் சரியாக அமைக்கப்படவில்லை.
இங்கிலாந்து அதனை, குறிப்பாக ஆண்டர்சன் பிடித்து விட்டார். ஐபிஎல் கிரிக்கெட்டில் சிக்சர்கள், பவுண்டரிகள் அடிப்பதற்காக பேட்டிங் செய்யும் போது ஷாட்களில் வலது கையை அழுத்திப் பிடித்து அடிக்கும் பழக்கத்திற்கு கோலி, தவான் அடிமையாகியுள்ளனர். ரோகித் சர்மாவுக்கும் அதே சிக்கல்தான்.
டெஸ்ட் போட்டிகளில் அதே முறையை மாற்றியமைத்துக் கொள்ள முடியவில்லை. காரணம் ஐபிஎல் முடித்துவிட்டு அடுத்து முக்கிய டெஸ்ட் தொடரை ஆடும்போது அதே பாட்டம் ஹேண்ட் பேட்டிங்தான் வருகிறது. இதனால்தான் ரோகித் சர்மா கவர் திசையிலும் மிட் ஆஃப் திசையிலும் கேட்ச் கொடுக்கிறார்.
கோலி பாட்டம் ஹேண்ட்டை அழுத்துவதால் பந்துகள் எளிதில் ஸ்லிப் திசையில் கேட்ச் ஆகிறது. முன்னங்காலில் வந்து டிரைவ் ஆடும் போது இடது கை மணிக்கட்டு நிலை பந்துக்கு நேர்கோட்டில் இருப்பது அவசியம். வலது கையில் அழுத்தம் கொடுக்கக்கூடாது. கொடுத்தால் பந்து தரைக்குச் செல்லாமல் கேட்ச்தான் ஆகும். இதெல்லாம் பாலபாடங்கள் அவர்களுக்கும் தெரியும். ஆனால் ஐபிஎல். கிரிக்கெட்டில் ஆடியாடி இதனை மாற்றிக் கொள்ள முடியாமல் போயுள்ளது.
புஜாரா நல்ல டெஸ்ட் வீரராக இருந்தார். ஆனால் அவருக்கும் இந்த பாட்டம் ஹேன்ட் பிரச்சினை இருக்கிறது. தவன் இடமே பறிபோயுள்ளது. ஆனால் மாற்று வீரர் கம்பீரும் பாட்டம் ஹேண்ட் பிரச்சினையால்தான் சரியாக ஆட முடியாமல் சொதப்ப நேரிட்டது. ஆகவே தவனுக்குப் பதிலாக கம்பீரைக் களமிறக்கியது சிறந்த மாற்று கிடையாது.
கேப்டன் தோனியின் ஆட்டமும் பார்க்க அசிங்கமாக இருப்பதற்குக் காரணம் பாட்டம் ஹேண்ட்தான்.
சச்சின் டெண்டுல்கர் எப்போதும் அயல்நாடுகளில் கிரீஸை விட்டு இரண்டு அடி தள்ளி நிற்பார். இதனால் எல்.பி. வாய்ப்பை முறியடிக்க முடிந்தது. மேலும் பவுலர்களை ஷாட்டாக வீச அவர் தூண்டினார். இதனால் லைன் மற்றும் லெந்த் கிடைக்காமல் பவுலர்கள் அவதியுற நேரிட்டது. பிறகு அவர்கள் அதனைக் கண்டுபிடிப்பதற்குள் சச்சின் டச்சிற்கு வந்து விடுவார்.
ஆகவே சச்சின், பாண்டிங், லாரா போன்றோரின் ஆட்டத்தை வீடியோவில் பார்த்தாவது கோலி, புஜாரா போன்றவர்கள் தங்கள் பலவீனத்தைக் கண்டடைய வேண்டும்.
எனவே நல்ல பந்து என்ற ஒன்றே கிடையாது என்று கூறவரவில்லை. பலமான பேட்ஸ்மென்கள் நல்ல பந்தை விழ விடாமல் செய்து விடுவர்.
ஆகவே கோலி நல்ல பந்தில் 4 முறை அவுட் ஆனார் என்று கூறுவது உயர்மட்ட கிரிக்கெட் ஆட்ட நிலவரங்களின் படி அபத்தமான கூற்றாகும். கோலியின் பாட்டம் ஹேண்ட் பிரச்சினை குறித்து திராவிடும் குறிப்பிட்டுள்ளார்.
இதில் சுதாரித்துக் கொண்டவர் அஜிங்கிய ரஹானே மட்டுமே. முரளி விஜய் கவனமாக ஆடுகிறார் அவ்வளவே. அதனால் அவரது பிரச்சினைகள் வெளியே தெரிவதில்லை.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago