கேப்டவுன்: “பிட்ச்களின் தரத்தை மதிப்பீடு செய்வதில் ஐசிசியும் அதன் ஆட்ட நடுவர்களும் ஏன் இரட்டை நிலைப்பாடு கொள்கின்றனர், பாரபட்சம் பார்க்கின்றனர்? இது ஏன் என்று தெரியவில்லை” என இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கேள்வி எழுப்பியுள்ளார்.
நடந்து முடிந்த கேப்டவுன் டெஸ்ட் போட்டி கிரிக்கெட் வரலாற்றில் மிக துரிதமாக முடிவடைந்த போட்டி என்ற சாதனையை நிகழ்த்த கேப்டவுன் பிட்ச் காரணமாக அமைந்தது. கேப்டவுன் பிட்ச் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக திகழ்ந்தது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இந்தப் போட்டிக்கு பின் பேசிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா, “நாம் இங்கு, இந்த டெஸ்ட் போட்டியில் என்ன நடந்தது என்பதைப் பார்த்தோம். எனக்கு உள்ளபடியே இப்படிப்பட்ட பிட்ச்களில் ஆடுவதில் எந்த ஒரு தயக்கமோ பிரச்சினைகளோ இல்லை. அதாவது இந்தியாவில் போடப்படும் பிட்ச்கள் பற்றி வாயை மூடிக்கொண்டிருக்கும் வரை இப்படிப்பட்ட பிட்ச்கள் பற்றி எனக்கு கவலையில்லை.
நேர்மையாகக் கூற வேண்டுமெனில் இந்தியப் பிட்ச்கள் பற்றி மட்டும் ஏன் விமர்சனங்கள் எழுகின்றன? என்னைப் பொறுத்தவரை எங்கு ஆடினாலும் நம்மை நாம் சவாலுக்குட்படுத்திக் கொள்கிறோம். அது எந்த பிட்ச் ஆக இருந்தாலும் சரி. ஆம்! இது அபாயகரமான பிட்ச். ஆனால் சவாலானது. இதேதான் இந்தியா வந்து மற்ற அணிகள் ஆடும்போதும் சவாலானதுதானே. இங்கு வந்து நாம் டெஸ்ட் கிரிக்கெட் ஆடுகிறோம். டெஸ்ட் கிரிக்கெட்டைப் பற்றித்தான் பேசுகிறோம். ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்தான் கிரிக்கெட் ஆட்டத்தின் உச்சம். இதில் நானும் உடன்படுகிறேன்.
இப்படிப்பட்ட சவால்கள் நம் முன்னே வைக்கப்படும் போது நாம் அதை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். இந்தியப் பிட்ச்களைப் பொறுத்தவரையிலும் இதுதானே! ஆனால் இந்தியாவில் எதிரணிகள் ஆடும்போது முதல் நாள் பிட்ச்சில் பந்துகள் திரும்ப ஆரம்பித்தால் உடனே அங்கே பார் தூசி என்று கதற தொடங்கி விடுகின்றனர். ஆனால் இங்கு கேப்டவுனில் என்ன நடந்தது. இந்த பிட்சில் ஏகப்பட்ட பிளவுகள் இருந்ததை ஏன் யாரும் கண்டுகொள்வதில்லை?
நாம் பிட்சை தரமதிப்பீடு செய்யும் போது நடுநிலை பேண வேண்டும் என்று கருதுகிறேன். குறிப்பாக ஐசிசி ஆட்ட நடுவர்கள் அனைத்து இடங்களிலும் பிட்சின் தரத்தை மதிப்பீடு செய்வதில் திறந்த கண்ணோட்டத்துடன் இருக்க வேண்டும். இது மிக முக்கியம். உலகக் கோப்பை இறுதிப் போட்டி பிட்ச் சராசரிக்கும் கீழ் என்று தர மதிப்பீடு வழங்கியது எனக்கு இன்னமும் அதிர்ச்சியாகவே இருக்கிறது. உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஒரு பேட்ஸ்மேன் சதமெடுத்தார். அப்படி இருக்கும் போது அந்தப் பிட்ச் எப்படி மோசமானதாக இருக்க முடியும்?. பிட்சை தரமதிப்பீடு செய்யும் போது பிட்சைத்தான் பார்க்க வேண்டுமே தவிர, நாடுகளை வைத்து தரமதிப்பீடு செய்ய கூடாது. இதுவும் முக்கியமானதே.
ஆகவே அவர்கள் தங்கள் காதுகளையும் திறந்து வைத்துக் கொள்ள வேண்டும். உண்மையாகவே இது போன்ற பிட்ச்களை நான் குறைகூறவில்லை. நான் சவால்களை விரும்புபவன். இது போன்ற பிட்ச்சுகளில் ஆடி எங்களை நாங்களே சவாலுக்குட்படுத்திக்கொள்ள விரும்புகிறோம். இது போன்ற பிட்ச்களில் ஆடுவதை பெருமையாகவே கருதுகிறோம்.
ஆனால், நான் சொல்ல விரும்புவதெல்லாம் தரமதிப்பீடு செய்யும் போது நடுநிலை பேண வேண்டும். பிட்ச்கள் தரமதிப்பீடு எப்படி செய்யப்படுகிறது என்பதை அறிய விரும்புகிறேன். அது என்ன அளவுகோல், அது என்ன அட்டவணை நான் பார்க்க விரும்புகிறேன். பிட்சை எப்படி தரமதிப்பீடு செய்கிறார்கள் என்பதை நான் பார்க்க விரும்புகிறேன். ஏனெனில் மும்பை, பெங்களூரு, கேப்டவுன், செஞ்சூரியன் அனைத்தும் வித்தியாசமான பிட்ச்களே. சூரிய ஒளி, வெப்பம் கடுமையாக இருக்கும் போது பிட்ச் விரைவிலேயே வறண்டு போவது இயற்கை.
இந்தியப் பிட்ச்களில் இயற்கையாகவே ஸ்பின் எடுக்கிறது. இது பலருக்கும் பிடிக்கவில்லை, ஏனெனில் முதல்நாளே திரும்புகிறதே என்கின்றனர். ஆனால் வேகப்பந்து வீச்சில் முதல்நாளில் கடுமையாக ஸ்விங் ஆனால் அது பரவாயில்லையா?. இது அனைவருக்கும் ஏற்புடையதா? இது நியாயமற்றது. ஆகவே முதல் நாளே பந்துகள் திரும்பினால் அதுவும் ஓகேதான். இதுதான் என் கருத்து.
இல்லையெனில் நடுநிலையைப் பேணுங்கள். இல்லையேல் இந்தப் பிட்ச்களையும் மோசம் என்று கூறுங்கள். முதல் நாள் ஸ்விங் பயங்கரமாக ஆகி பந்துகள் எழும்பினால் ஓகே. ஆனால் பந்துகள் திரும்பினால் அது மோசமான பிட்சா?. இது முற்றிலும் தவறு. இதுதான் என்னுடைய கருத்து. இந்தக் கருத்திலேயே நான் இருப்பேன். ஏனெனில் நான் நிறைய கிரிக்கெட் ஆடிவிட்டேன். நிறைய பார்த்து விட்டேன். இந்த ஆட்ட நடுவர்களையும் கண்டுகொண்டு வருகிறேன். ஐசிசி பிட்ச் ரேட்டிங்கையும் பார்த்து வருகிறேன். அவர்கள் எப்படி ரேட்டிங் செய்ய விரும்புகிறார்கள் என்பதில் எனக்கு பிரச்சினையில்லை. ஆனால் நடுநிலையுடன் ரேட்டிங் செய்யுங்கள்” என்று காட்டமாக கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
51 mins ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago