IND-W vs AUS-W | 3-0 என தொடரை வென்றது ஆஸி. மகளிர் அணி; 3-வது ஒருநாள் போட்டியிலும் இந்தியா தோல்வி!

By செய்திப்பிரிவு

மும்பை: இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது ஆஸ்திரேலிய அணி. மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி தோல்வியை தழுவி உள்ளது.

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடி வருகிறது. இந்த பயணத்தில் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலியா அதில் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் கடந்த டிசம்பர் 28-ம் தேதி தொடங்கியது. முதல் இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை வென்றது. இதில் இரண்டாவது போட்டியில் 3 ரன்களில் ஆஸ்திரேலியா வென்றது.

தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்து 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 338 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஓப்பனர்கள் ஃபோப் லிட்ச்ஃபீல்ட் மற்றும் ஹீலி 189 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஹீலி 82 ரன்களும், லிட்ச்ஃபீல்ட் 119 ரன்களும் எடுத்தனர்.

339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது. இந்திய அணி வீராங்கனைகள் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தனர். 32.4 ஓவர்களில் 148 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது இந்தியா. அதன் மூலம் 190 ரன்களில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா வெல்லும் 9-வது தொடர் இது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE