SA vs IND | “ஒரு பவுலரை மட்டும் சார்ந்திருக்க முடியாது” - டெஸ்ட் தோல்வி குறித்து ரோகித் சர்மா

By செய்திப்பிரிவு

செஞ்சுரியன்: “ஒரேயொரு பந்து வீச்சாளரை மட்டும் சார்ந்திருக்க முடியாது; மற்ற பந்து வீச்சாளர்களும் தங்கள் பங்கை செய்ய வேண்டும்” என்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தோல்விக்கு பின் இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேசியுள்ளார்.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை தழுவியுள்ளது. செஞ்சுரியன் கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸை இழந்து முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 245 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 408 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. டீன் எல்கர் 185 ரன்கள் விளாசினார். மார்கோ யான்சன் 84 ரன்கள் எடுத்தார். இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக 4 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார் பும்ரா.

163 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது இந்தியா. விராட் கோலி, 82 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து ஆறுதல் தந்தார். கில் 26 ரன்கள் எடுத்திருந்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். 34.1 ஓவர்களில் 131 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது இந்தியா. அதன் மூலம் தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது தென் ஆப்பிரிக்கா.

டெஸ்ட் தோல்வி குறித்து பேசியுள்ள இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, “இது 400 ரன்கள் எடுக்கக்கூடிய பிட்ச் அல்ல. ஆனால், நாங்கள் நிறைய ரன்கள் விட்டுக்கொடுத்தோம். பும்ரா நன்றாகப் பந்துவீசினார். அவரின் தரம் குறித்து நாம் அனைவரும் அறிவோம். அவருக்கு ஆதரவு கிடைக்கவில்லை. ஒரேயொரு பந்து வீச்சாளரை மட்டும் சார்ந்திருக்க முடியாது; மற்ற பந்து வீச்சாளர்களும் தங்கள் பங்கை செய்ய வேண்டும். மற்ற பந்துவீச்சாளர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. அவர்கள் முயற்சி செய்தார்கள். எனினும் நாங்கள் விரும்பியது நடக்கவில்லை. தென் ஆப்பிரிக்கா எப்படி பந்து வீசியது என்பதில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

பிரசித் கிருஷ்ணா அனுபவமில்லாத வீரர். அவர் நிறைய டெஸ்ட் கிரிக்கெட் விளையாடவில்லை என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். தென் ஆப்பிரிக்காவிலும் அனுபவமில்லாத வீரர்கள் இருந்தனர். அவர்கள் அணிக்கு தேவையானதை செய்துகொடுத்தனர். இதனால் அந்த அணி வெற்றிபெற்றது.

உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது அதை சரியாக பயன்படுத்தி அணிக்காக வேலையைச் செய்ய வேண்டும். பிரசித் தனது முதல் போட்டியில் விளையாடியதால் பதற்றமாக இருந்திருப்பார். எல்லோரும் அப்படிதான் முதல் போட்டியில் விளையாடும்போது பதற்றமாகவே இருந்திருப்பார்கள். பிரசித் கிருஷ்ணாவின் திறமை குறித்து நாங்கள் அறிவோம். எனவே எங்கள் அணி அவருக்கு ஆதரவாக இருக்கும்" என்று பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE