மெல்போர்ன் பாக்சிங் டே டெஸ்ட்: ஆஸ்திரேலியாவுக்கு உதவிய மிஸ் பீல்டிங், நடுவர் தீர்ப்புகள்!

By ஆர்.முத்துக்குமார்

மெல்போர்ன் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்டம் டெஸ்ட் போட்டி ஏன் மற்ற வடிவங்களை விட நுட்பமானது, சுவாரஸ்யமானது, விறுவிறுப்பானது என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தது. முதலில் 194/6 என்று தன் முதல் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் பேட்டிங்கில் சுலபமாக விட்டுக் கொடுக்காமல் 264 ரன்களை எடுத்தது. ஆஸ்திரேலியா தன் 2வது இன்னிங்ஸைத் தொடங்கிய போது ஷாஹின் அஃப்ரிடி, மிர் ஹம்சா அட்டகாசத்திற்கும் மேலாக வீசி 16 ரன்களுக்கு 4 ஆஸ்திரேலிய விக்கெட்டுகளை எடுத்திருந்தனர். ஆனால் அதன் பிறகு கேட்சையும் கோட்டை விட்டு ஆட்டத்தையும் தற்போது தங்கள் பிடியிலிருந்து நழுவ விட்டுள்ளனர்.

16/4 என்ற நிலையிலிருந்து ஸ்மித், மிட்செல் மார்ஷ் 153 ரன்களை 5வது விக்கெட்டுக்காக கடும் பாடுபட்டு சேர்த்தனர். ஸ்மித், மார்ஷ் இருவருக்குமே 2 முறை எல்.பி. அப்பீல் களநடுவர் நாட் அவுட் தீர்ப்பினால் 3வது நடுவர் ரெஃபரலில் ‘அம்பயர்ஸ் கால்’ ஆனது பாகிஸ்தானின் துரதிர்ஷ்டம். மிட்செல் மார்ஷ்ஷுக்கு ஸ்லிப்பில் கேட்சை விட்டார் அப்துல்லா ஷபீக். முதல் இன்னிங்சில் வார்னருக்குக் கேட்சை விட்டதும் இவர்தான். பின் அவரை ஏன் ஸ்லிப்பில் அதே இடத்தில் நிற்க வைக்கிறார்கள் என்பது கேப்டன்சியின் போதாமை தவிர வேறொன்றுமில்லை.

இம்ரான் கான் ஒரு வலுவான கேப்டனாக இருந்ததால் கேட்சை விட்டால் அந்த பீல்டரை உடனே தூக்கி எல்லைக் கோட்டருகே நிறுத்தி விடுவார். இதனை கேட்சை விட்டதற்கான தண்டனையாகவும் எடுத்துக் கொள்ளலாம், அல்லது கேட்ச் விட்டவரை அதே இடத்தில் நிறுத்தி வைத்தால் விட்ட கேட்சை நினைத்து நினைத்து ஆட்டத்தின் அந்தத் தருணத்தில் இல்லாமல் போய் மேலும் கேட்ச்களை விடலாம் என்பதற்காகவும் இருக்கலாம்.

இரண்டாவது முக்கியமான கேட்சை விட்ட பிறகு ஷஃபீக்கை பீல்ட் மாற்றம் செய்தார் மசூத். இது தாமதமான முடிவே. இன்று மார்ஷுக்கு கேட்சை விட்ட போது அவர் 20 ரன்களில் இருந்தார் என்பதும் ஆஸ்திரேலியா 46 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்பதும்தான் முக்கியம். கடைசியில் 13 பவுண்டரிகளுடன் அவர் 130 பந்துகளில் 96 ரன்கள் எடுத்து மிர் ஹம்சாவின் அட்டகாசமான அவுட் ஸ்விங்கரில் எட்ஜ் ஆகி ஆகா சல்மான் கேட்ச் காரணமாக பெவிலியன் திரும்பினார்.

பிட்ச்சில் பந்து இன்னும் எகிறுகிறது, ஸ்விங் ஆகிறது என்பதால் ஆஸ்திரேலியா அணி இப்போதே 241 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நிலையில் பாகிஸ்தான் சேஸ் செய்வது மிக மிகக் கடினம். இன்று காலை 194/6 என்று தொடங்கிய பாகிஸ்தான் நல்ல உறுதியுடன் போராட்டக் குணத்துடன் ஆடினர். 2ம் நாள் ஆட்டத்தில் ஷபீக், மசூத் அபாரமாக ஆடினர். ஆனால் ஆட்டத்தின் பிற்பகுதியில் 64 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் தடுமாறியது.

பிறகு ரிஸ்வான் 42 ரன்களை எடுத்து நன்றாக ஆடினார். ஜமால் 33 ரன்களை எடுத்து ஒரு டெஸ்ட் ஆல்ரவுண்டருக்கான திறமை இருப்பதன் சுவட்டைக் காட்டினார். ஆஸ்திரேலியா தரப்பில் கேப்டன் பாட் கமின்ஸ் 20 ஓவர்களில் 48 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார். பாட் கமின்ஸை பாகிஸ்தானுக்கு ஆடத்தெரியவில்லை. பாட் கமின்ஸின் 10வது 5 விக்கெட் பவுலிங் ஆகும் இது. 500 டெஸ்ட் விக்கெட்டுகளைக் கடந்த லெஜண்ட் நேதன் லயன் 73 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள்.

முதல் இன்னிங்சில் 54 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் பாகிஸ்தானின் அட்டகாசமான பவுலிங்கினால் மடங்கியது. உணவு இடைவேளைக்கு முன்னதாகவே உஸ்மான் கவாஜாவையும் மாரனஸ் லபுஷேனையும் வெளியேற்றினார் ஷாஹின் அஃப்ரிடி. மிர் ஹம்சா தொடர்ந்து வார்னருக்கு நல்ல பந்துகளை வீச ஸ்ட்ரோக் மாட்டாத நிலையில் கடைசியில் ஒரு ஷார்ட் பிட்ச் பந்தை புல் ஆட முயன்று பந்தை ஸ்டம்புக்குள் வாங்கி விட்டுக் கொண்டார்.

கடைசியாக மெல்போர்னில் ஆடியதால் வார்னர் பெவிலியன் சென்ற போது ரசிகர்கள் எழுந்து நின்று கரகோஷம் செய்தனர். அடுத்த பந்தே அபாய பேட்டர் டிராவிஸ் ஹெட்டிற்கு இந்த டெஸ்ட் தொடரின் ஆகச்சிறந்த பந்தை வீசினார் மிர் ஹம்சா. பந்து குட் லெந்தில் பிட்ச் ஆகி பெரிய அளவில் இன்ஸ்விங் ஆகி ஹெட்டின் ஸ்டம்புகள் எகிறியது. கோல்டன் டக். ஹம்சாவுக்கு ஹாட்ரிக் வாய்ப்பு. ஆனால் மார்ஷ் ஹாட்ரிக் பந்தை ஆடாமல் விட்டு விட்டார்.

ஸ்மித், மார்ஷ் இருவரும் கொஞ்ச நேரத்துக்கு அட்டகாசமான பாகிஸ்தான் பவுலிங்கை எதிர்கொண்டு பொறுமை காத்தனர். பிறகு மார்ஷ் பந்து உடைந்து விடும்போன்ற ஆக்ரோஷமான பவுண்டரிகளை அடிக்கத் தொடங்க ஸ்டீவ் ஸ்மித் ஒருவிதத்தில் தடவல் இன்னிங்ஸை ஆடி அரைசதம் கண்டார். ஸ்மித் 100 பந்துகளைச் சந்தித்த பிறகுதான் முதல் பவுண்டரியையே அடித்தார் என்றால் பாகிஸ்தானின் பவுலிங் எப்படி என்று பார்த்துக் கொள்ளலாம். மார்ஷுக்கு அந்தக் கேட்ச், இருவருக்கும் அம்பயர்ஸ் கால் அவுட் தராதது என்று துரதிர்ஷ்டமும் பாகிஸ்தானைத் துரத்தியது, மிஸ் பீல்டிங் என்னும் பூதமும் ஆஸ்திரேலியாவுக்கு உதவியது.

ஸ்டீவ் ஸ்மித் 176 பந்துகளைச் சந்தித்து 50 ரன்களையே எடுத்தார். மிட்செல் மார்ஷ் 96 ரன்களில் மிர் ஹம்சா பந்தை எட்ஜ் செய்து கேட்ச் ஆகி வெளியேறினார். ஸ்டீவ் ஸ்மித் நாளின் கடைசி ஓவரில் ஷாஹின் அஃப்ரிடியின் பயங்கரமான எகிறு பந்தில் கல்லியில் கேட்ச் ஆகி வெளியேறினார். அலெக்ஸ் கேரி 16 ரன்களுடன் கிரீசில் இருக்கிறார். பாகிஸ்தான் தரப்பில் அஃப்ரிடி, மிர் ஹம்சா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE