AUS vs PAK 2-வது டெஸ்ட் போட்டி: பாகிஸ்தான் அணி 264 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

By செய்திப்பிரிவு

மெல்பர்ன்: ஆஸ்திரேலி அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 264 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

மெல்பர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 66 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. டேவிட் வார்னர் 38, உஸ்மான் கவாஜா 42, ஸ்டீவ் ஸ்மித் 26 ரன்களில் ஆட்டமிழந்தனர். மார்னஷ் லபுஷேன் 44, டிராவிஸ் ஹெட் 9 ரன்களுடன் களத்தில் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 96.5 ஓவர்களில் 318 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

டிராவிஸ் ஹெட் 17 ரன்னில் ஷாகீன் ஷா அப்ரிடி பந்தில் வெளியேறினார். மார்னஷ் லபுஷேன் 155 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 63 ரன்களில் அமீர் ஜமால் பந்தில் ஆட்டமிழந்தார். மிட்செல் மார்ஷ் 41, அலெக்ஸ் கேரி 4, மிட்செல் ஸ்டார்க் 9, கேப்டன் பாட் கம்மின்ஸ்13, நேதன் லயன் 8 ரன்களில் நடையை கட்டினர். பாகிஸ்தான் அணி தரப்பில் அமீர் ஜமால் 3 விக்கெட்களையும் ஷாகீன் ஷா அப்ரிடி, மிர் ஹம்சா, ஹசன் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இதையடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 55 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரரான அப்துல்லா ஷபிக் 109 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 62 ரன்களும், கேப்டன் ஷான் மசூத் 76 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 54 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்து அசத்தியது. இமாம் உல் ஹக் 10, பாபர்அஸம் 1, சவுத் ஷகீல் 9, ஆகாசல்மான் 5 ரன்களில் நடையை கட்டினர். முகமது ரிஸ்வான் 29, அமீர் ஜமால் 2 ரன்களுடன் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலிய அணி சார்பில் பாட் கமிம்மின்ஸ் 3, நேதன் லயன் 2, ஜோஷ் ஹேசில்வுட் ஒரு விக்கெட் கைப்பற்றினர். கைவசம் 4 விக்கெட்கள் இருக்க 124 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்று 3-வது நாள் ஆட்டத்தை தொடங்கியது பாகிஸ்தான் அணி.

42 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரிஸ்வான் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஷாகீன் ஷா அப்ரிடி, ஹசன் அலி, மிர் ஹம்சா ஆகியோர் ஆட்டமிழந்தனர். முதல் இன்னிங்ஸில் 264 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது பாகிஸ்தான். அதனால் ஆஸ்திரேலிய அணி 54 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. 3-வது நாள் உணவு நேர இடைவேளையின் போது 6 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்துள்ளது ஆஸி. கவாஜா மற்றும் லபூஷேன் விக்கெட்டை கைப்பற்றினார் ஷாகீன் ஷா அப்ரிடி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE