புதுடெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய நிர்வாக அமைப்பை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் இடைநீக்கம் செய்திருக்கும் நிலையில், அந்தக் கூட்டமைப்பின் நடவடிக்கைகளை நிர்வகிக்க தற்காலிக குழு ஒன்றை இந்திய ஒலிம்பிக் சங்கம் அமைத்துள்ளது. இந்தத் குழுவின் தலைவராக பூபேந்திர சிங் பஜ்வா நியமிக்கப்பட்டுள்ளார். எம்.எம்.சவுமியா, மஞ்சுஷா தன்வார் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இது குறித்து இந்திய ஒலிம்பிக் சங்கம் வெளியிட்டுள்ள கடிதத்தில், ‘சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய மல்யுத்த கூட்டமைபின் புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகள் கூட்டமைப்பின் சட்டவிதிகளை மீறி தன்னிச்சையாக முடிவுகளை எடுத்துள்ளனர். ஐஓசி-யால் கடைபிடிக்கப்படும் சிறந்த நிர்வாகம் மற்றும் கொள்கைகளுக்கு எதிராகவும், விதிகளுக்குப் புறம்பாகவும் முடிவுகளை ரத்து செய்துள்ளதை இந்திய ஒலிம்பிக் சங்கம் சமீபத்தில் அறிய நேர்ந்தது. அதனால், மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்க தற்காலிக குழுவை நியமிக்கிறது. நியாயமான விளையாட்டு, பொறுப்பேற்பு, வெளிப்படைத் தன்மை ஆகியவற்றை புதிய நிர்வாகக் குழு உறுதி செய்யும்.
வீரர், வீராங்கனைகள் தேர்வு, சர்வதேச போட்டிகளில் வீரர்கள் பங்கேற்பதற்கான பதிவுகளை சமர்ப்பிப்பது, விளையாட்டுகளை ஒருங்கிணைப்பது, வங்கிக் கணக்குகளை கையாளுவது, வலைதளத்தினை நிர்வகிப்பது மற்றும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் பிற நடவடிக்கைகளை இந்தக் குழு மேற்கொள்ளும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, வீரர்களின் போராட்டம், பல்வேறு மாநில மல்யுத்த சங்கங்கள் தொடர்ந்த வழக்கு போன்ற காரணங்களால் பல முறை தள்ளிப்போன இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தல் டிச.21-ம் தேதி டெல்லியில் நடைபெற்றது. அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்தத் தேர்தலில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சிங்கின் நெருங்கிய உதவியாளரான சஞ்சய் சிங் மொத்தமுள்ள 47 வாக்குகளில் 40 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதேபோல் பெரும்பாலான நிர்வாக பதவிகளில் பிரிஜ் பூஷண் அணியினரே வெற்றி பெற்றனர்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய தலைவராக சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் மல்யுத்தத்தை விட்டு விலகுவதாக அறிவித்தார். தொடர்ந்து மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா மல்யுத்தத்தை விட்டு விலகுவதாக அறிவித்ததோடு, தனக்கு அளிக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை பிரதமர் மோடியிடம் திரும்ப ஒப்படைப்பதாக கூறி, கடந்த 22-ம் தேதி விருதை பிரதமர் இல்லத்தின் வாசலில் வைத்துவிட்டுச் சென்றார்.
இதனிடையே, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக தேர்வான சஞ்சய் சிங் 15 வயதுக்கு உட்பட்ட மற்றும் 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் உத்தரப் பிரதேசத்தின் கோண்டாவில் உள்ள நந்தினி நகரில் நடைபெறும் என்ற அறிவிப்பை வெளிட்டார்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்கும் புதிய நிர்வாகிகள் விஷயத்தில் கடும் அதிருப்தி ஏற்பட்ட நிலையில், அந்த நிர்வாக அமைப்பை ஞாயிற்றுக்கிழமை (டிச.24) இடைநீக்கம் செய்து மத்திய அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து இந்திய மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்க தற்காலிக அமைப்பை உருவாக்குமாறு இந்திய ஒலிம்பிக் சங்கத்தினை (ஐஒஏ) மத்திய விளையாட்டுத் துறை கேட்டுக்கொண்டது. ஐஒஏ-வுக்கு விளையாட்டுத் துறை எழுதியுள்ள கடிதத்தில், தற்காலிக அமைப்பு வீரர்கள் தேர்வு உள்ளிட்ட மல்லயுத்த அமைப்பின் அனைத்து விவகாரங்களையும் கவனிக்கட்டும் என்று தெரிவித்திருந்தது. இந்தப் பின்னணியில் தற்காலிகக் குழு நியமிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago