ISPL | சென்னை அணியை வாங்கிய நடிகர் சூர்யா!

By செய்திப்பிரிவு

சென்னை: ஐஎஸ்பில் (ISPL) எனப்படும் இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் சென்னை அணியை வாங்கியுள்ளார் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சூர்யா. இதனை அதிகாரபூர்வமாக தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

டி20 கிரிக்கெட் போட்டிகளின் அடுத்த வெர்சனாக டி10 போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 10 ஓவர்கள் மட்டுமே நடத்தப்படும் இந்த வகையான டி10 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரபலமாக நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது இந்தியாவிலும் இந்த வகையான கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படவுள்ளது. CCS Sports LLP எனும் நிறுவனம் ISPL T10 எனப்படும் இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் என்கிற பெயரில் 10 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

இத்தொடரில் ஸ்டார் கிரிக்கெட் வீரர்கள் யாரும் இடம்பெறப்போவதில்லை. மாறாக, உள்ளூர் அளவில் நல்ல திறமையோடு இருக்கும் வீரர்களைக் கொண்டு இந்த கிரிக்கெட் போட்டி நடக்கவுள்ளது. சுமார் ஒரு மாதத்துக்கு முன்பு இந்த தொடரின் அறிமுக நிகழ்வு நடந்தது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இத்தொடரின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மற்ற வகை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் அதே மைதானங்களில் தான் இந்தத் தொடரும் நடைபெறும் என்றாலும், டென்னிஸ் வகை பந்துகள் மட்டுமே இந்தப் போட்டிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளது.

வரும் மார்ச் 2ம் தேதி முதல் மார்ச் 9ம் தேதி வரை மொத்தம் 19 போட்டிகள் நடைபெறவிருக்கும் இத்தொடரில் மும்பை, ஹைதராபாத், சென்னை, பெங்களூர், கொல்கத்தா, ஸ்ரீநகர் என 6 அணிகள் என பங்கேற்கவுள்ளன. இதில் மும்பை அணியை பாலிவுட்டின் பிக் பி அமிதாப் பச்சனும், ஹைதராபாத் அணியை நடிகர் ராம் சரணும் வாங்கியுள்ளனர். பெங்களூரு அணியை ஹிரித்திக் ரோஷன் வாங்கியுள்ளார்.

தற்போது சென்னை அணியை தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சூர்யா வாங்கியுள்ளார். இதனை தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தும் இருக்கிறார் நடிகர் சூர்யா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE