AUS vs PAK | முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 318 ரன்கள் சேர்ப்பு

By செய்திப்பிரிவு

மெல்பர்ன்: பாகிஸ்தான் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 360 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் இரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று மெல்பர்ன் நகரில் தொடங்கியது.

‘பாக்ஸிங் டே’ போட்டியான இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பீல்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியை காண 62,167 ரசிகர்கள் மைதானத்தில் குவிந்திருந்தனர். பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா ஜோடி நிதானமான தொடக்கம் கொடுத்தது. வார்னர் 2 ரன்களில் இருந்தபோது ஷாகீன் ஷா அப்ரீடி பந்தில்முதல் சிலிப்பில் கொடுத்த கேட்ச்சை அப்துல்லா ஷபிக் தவறவிட்டார். காற்றின் ஈரப்பதம், ஆடுகளத்தின் தன்மையை பயன்படுத்தி பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் ஸ்விங் மற்றும் சீரான வேகத்தால் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுத்தனர்.

ஆனாலும் சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணிக்கு கூடுதல் நெருக்கடி கொடுக்க முடியாமல் போனது. முதல் விக்கெட்டுக்கு 27.1 ஓவர்களில் 90 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில் டேவிட் வார்னர் ஆட்டமிழந்தார். அவர், 83 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்த நிலையில் ஆகா சல்மான் ஆஃப் சைடுக்கு வெளியே வீசிய பந்தை விளாச முயன்றார். ஆனால் சீரான உயரத்துடன் எழுந்த பந்து மட்டையின் விளம்பில் பட்டு முதல் சிலிப்பில் நின்ற பாபர் அஸமிடம் கேட்ச் ஆனது.

சிறிது நேரத்தில் ஹசன் அலி வீசிய பந்தில் 2-வது சிலிப் திசையில் நின்ற ஆகா சல்மானிடம் பிடிகொடுத்து வெளியேறினார் உஸ்மான் கவாஜா. 101 பந்துகளை சந்தித்த உஸ்மான் கவாஜா 5 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் சேர்த்தார். இதன் பின்னர் மார்னஷ் லபுஷேனுடன் இணைந்த ஸ்டீவ் ஸ்மித்,தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தினார். ஆஸ்திரேலிய அணி 42.4ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்த நிலையில் மழைகாரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது.

சுமார் 3 மணி நேரத்துக்கு பின்னர்மீண்டும் ஆட்டம் தொடங்கப்பட்டது. நிதானமாக பேட் செய்து வந்த ஸ்டீவ் ஸ்மித் 75 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எடுத்த நிலையில் அமீர் ஜமால் பந்தில் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வானிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். களநடுவர் முதலில் அவுட் கொடுக்க மறுத்த நிலையில் பாகிஸ்தான் அணி மேல்முறையீடு செய்து ஸ்மித்தை வெளியேற்றியது. லபுஷேனுடன் இணைந்து 3-வது விக்கெட்டுக்கு 46 ரன்கள் சேர்த்தார் ஸ்டீவ் ஸ்மித்.

முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 66 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. மார்னஷ் லபுஷேன் 120 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 44 ரன்களும் டிராவிஸ் ஹெட் 19 பந்துகளில், 9 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். பாகிஸ்தான் அணி ரப்பில் ஆகா சல்மான், ஹசன்அலி, அமீர் ஜமால் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 318 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் அணி 8 ஓவர்களில் 18 ரன்கள் எடுத்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE