SA vs IND முதல் டெஸ்ட் | முதல் நாளில் 8 விக்கெட்களை இழந்த இந்தியா: ராகுல் பொறுப்பான ஆட்டம்

By செய்திப்பிரிவு

செஞ்சுரியன்: தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் 8 விக்கெட்களை இழந்துள்ளது இந்திய அணி. இந்திய அணிக்காக பொறுப்புடன் பேட் செய்து வருகிறார் கே.எல்.ராகுல்.

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளும் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடிய நிலையில், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பலப்பரீட்சை மேற்கொண்டு வருகின்றன. இந்த தொடரின் முதல் போட்டி செவ்வாய்க்கிழமை செஞ்சுரியன் நகரில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸை வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச முடிவு செய்தது.

இந்திய அணிக்காக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணையர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் கண்டனர். கேப்டன் ரோகித் 4 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து ஜெய்ஸ்வால் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கில் 2 ரன்களிலும், ஸ்ரேயஸ் ஐயர் 31 ரன்களிலும் வெளியேறினர். 100 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்களை இழந்தது இந்தியா. 64 பந்துகளை எதிர்கொண்ட கோலி, 38 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து அஸ்வின், தாக்கூர், பும்ரா ஆகியோர் ஆட்டமிழந்தனர்.

மறுமுனையில் பேட் செய்த கே.எல்.ராகுல், பொறுப்பாக ஆடி வருகிறார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 105 பந்துகளை எதிர்கொண்ட அவர் 70 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 10 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். முதல் நாளில் 59 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்துள்ளது இந்தியா. மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் மேற்கொண்டு தொடர முடியாமல் நிறுத்தப்பட்டது. தென் ஆப்பிரிக்க அணி சார்பில் ரபாடா 5 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE