மறக்குமா நெஞ்சம் | டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷேன் வார்ன் வரலாற்று சாதனை படைத்த தினம்

By செய்திப்பிரிவு

சென்னை: கடந்த 2006-ல் இதே நாளில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் ஜாம்பவானுமான ஷேன் வார்ன், டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் 700-வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்திருந்தார். அது கிரிக்கெட் உலகின் பொன்னான தருணங்களில் ஒன்று. ஏனெனில், டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற சாதனையையும் அவர் அன்றைய தினம் படைத்தார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக 1992 முதல் 2007 வரையில் சர்வதேச கிரிக்கெட் களத்தில் ஷேன் வார்ன் விளையாடினார். 145 டெஸ்ட் மற்றும் 194 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார். மொத்தமாக 1001 விக்கெட்களை சர்வதேச கிரிக்கெட்டில் கைப்பற்றி உள்ளார். இதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் அவர் கைப்பற்றிய விக்கெட் 708. அவரது கிரிக்கெட் வாழ்க்கை எல்லா வீரர்களையும் போல அமையவில்லை. திறன் படைத்த வீரராக இருந்தாலும் களத்தில் விளையாட தடையை எதிர்கொண்டவர்.

அவரது 700-வது விக்கெட்? 2006-07 ஆஷஸ் தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக வார்ன் அறிவித்திருந்தார். அதே போலவே 2007-ல் இங்கிலாந்து அணியுடனான சிட்னி டெஸ்ட் போட்டிக்கு பிறகு ஓய்வு பெற்றார். அந்த போட்டிக்கு முந்தைய போட்டி மெல்பர்னில் நடைபெற்றது. அந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 50 ரன்கள் எடுத்து செட் ஆகி இருந்த ஆண்ட்ரூ ஸ்ட்ராஸை போல்ட் செய்து வெளியேற்றினார். அதுவே டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது 700-வது விக்கெட்டாக அமைந்தது.

வார்னின் கிளாசிக் சுழற்பந்து வீச்சுக்கு இந்த விக்கெட் சிறந்த உதாரணம் என போற்றப்படுவது உண்டு. அப்போது மைதானத்தில் இருந்து பார்வையாளர்கள் எழுந்து நின்று, கர ஒலி எழுப்பி அவரது சாதனையை பாராட்டி இருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE