தென் ஆப்பிரிக்காவில் யாரும் செய்யாததை சாதிக்க விரும்புகிறோம்: ரோஹித் சர்மா உறுதி

By செய்திப்பிரிவு

செஞ்சுரியன்: தென் ஆப்பிரிக்காவில் எந்த அணியும் செய்யாத சாதனையை நாங்கள் சாதிக்க விரும்புகிறோம் என்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார்.

இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்நிலையில் டெஸ்ட் போட்டி தொடர் இன்று செஞ்சுரியனில் தொடங்கவுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் ரோஹித் சர்மா கூறியதாவது: தென் ஆப்பிரிக்காவுக்கு இதுவரை இந்திய அணி பலமுறை சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடர்களில் விளையாடியுள்ளது. ஆனால் ஒரு முறை கூட இந்தியஅணி, டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்காவில் வென்றதில்லை.

கடந்த காலங்களில் இந்திய அணி செய்யாத சாதனையை நாங்கள் இங்கு செய்ய விரும்புகிறோம். 1992-ம் ஆண்டு முதலே இந்திய அணி, இங்கு வந்து டெஸ்ட் தொடர்களில் விளையாடியிருக்கிறது. ஆனால் தொடரை வெல்ல முடியாத சோதனை இந்திய அணிக்குத் தொடர்கிறது. எனவே, இதற்கு முந்தைய இந்திய அணிகள் செய்யாத சாதனையை நாங்கள் செய்ய இங்கு வந்துள்ளோம். டெஸ்ட் தொடரை வெல்வதே எங்களது நோக்கம்.

நான் தொடர்ந்து கிரிக்கெட்டை நேசித்து விளையாட விரும்புகிறேன். எனக்கு முன்பு என்ன வடிவத்தில் கிரிக்கெட் இருக்கிறதோ அதை அனுபவித்து விளையாட விரும்புகிறேன். முதல் டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பராக இருப்பார். இந்தப் போட்டியில் அவர் கீப்பராக செயல்படுவதில் ஆர்வமாக உள்ளார்.

முகமது ஷமி அணியில் இல்லாதது வருத்தம்தான். அவர் இல்லாததால் நாங்கள் அவரைமிகவும் `மிஸ்' செய்கிறோம். கடந்த டெஸ்ட் தொடர்களில் அவரது பங்களிப்பு மிகவும் அதிகம். அவருடைய இடத்தை வேறு யாரையும் இட்டு நிரப்புவது அத்தனை சுலபமானது அல்ல. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE