புதிய ‘சுல்தான் ஆஃப் ஸ்விங்’ குர்பானி அபாரம்: டெல்லியை வீழ்த்தி ரஞ்சிக் கோப்பையை வென்று விதர்பா வரலாறு!

By ஆர்.முத்துக்குமார்

 

டெல்லி அணிக்கு எதிராக இந்தூரில் நடைபெற்ற ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் விதர்பா அணி வெற்றி பெற்று முதன் முதலாக ரஞ்சி சாம்பியன் ஆகி வரலாறு படைத்தது விதர்பா அணி.

ரஜ்னீஷ் குர்பானி எனும் இன்ஸ்விங்கர் அதிசயன்!

விதர்பா அணியின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர் ரஜ்னீஷ் குர்பானி தனது பெரிய இன்ஸ்விங்கர்களால் பயமுறுத்தினார், முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை ஒரு ஹாட்ரிக் சாதனையுடன் கைப்பற்றி, 2-வது இன்னிங்சில் 2 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றி 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதே குர்பானிதான் ரஞ்சி சாம்பியனாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட கர்நாடகாவுக்கு எதிரான அரையிறுதியில் கடைசியில் அற்புதமாக வீச 5 ரன்களில் கர்நாடக அணி தோற்றது. ரஜ்னீஷ் குர்பானி 68 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

டெல்லிக்கு எதிராக ஹாட்ரிக் சாதனை புரிந்த குர்பானி, ரஞ்சி இறுதிப் போட்டியில் ஹாட்ரிக் எடுத்த 2-வது வீரரானார். இவரது யானை பலம் இன்ஸ்விங்கர். இந்தப் பந்தில்தான் ஹாட்ரிக் சாதனையில் 3 டெல்லி வீரர்களூம் அடுத்தடுத்து பவுல்டு செய்யப்பட்டனர். வேகம் 130-135தான், ஆனாலும் மிகப்பெரிய இன்ஸ்விங்கரைக் கைவசம் வைத்துள்ளார். 1983 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் 183 ரன்களை இந்திய அணி எடுத்து அசுர மே.இ.தீவுகள் களமிறங்கிய போது பல்வீந்தர் சிங் சாந்து என்ற மும்பை ஸ்விங் பவுலர் கார்டன் கிரீனிட்ஜுக்கு ஒரு இன்ஸ்விங்கர் வீசுவாரே பார்க்கலாம், கிரீனிட்ஜ் ஆட வேண்டாம் என்று நினைக்கும் அளவுக்கு வைடாக பிட்ச் ஆன பந்து உள்ளே ஸ்விங் ஆக ஸ்டம்பைப் பதம் பார்த்தது, கார்டன் கிரீனிட்ஜ் அதிர்ந்தார், மே.இ.தீவுகள் ஓய்வறை அதிர்ந்தது. அவரை விட கொஞ்சம் வேகம் கூடுதலாக இவர் அதே பாணி இன்ஸ்விங்கரை கைவசம் வைத்துள்ளார், இடது கை பேட்ஸ்மென்களுக்கு பெரிய அச்சுறுத்தல், வலது கை பேட்ஸ்மென்களுக்கு இவரது இன்ஸ்விங்கர்கள் சிம்ம சொப்பனம். ஆனால் ஒரு பந்தை அதே இடத்தில் பிட்ச் செய்து 3,4,5 இன்ஸ்விங்கருக்குப் பிறகு வெளியேவும் கொண்டு செல்கிறார், இது மிகவும் அபாயகரமான பந்து ஆகும்.

இந்நிலையில் டெல்லி அணி 10 ஆண்டுகளுக்குப் பிறகு ரஞ்சி இறுதியில் காலடி எடுத்து வைத்து முதல் இன்னிங்ஸில் 295 ரன்கள் எடுத்தது. கம்பீர் 15 ரன்களை மட்டுமே எடுத்தார். ஷோரி என்பவர் 145 ரன்கள் எடுத்தார். குர்பானி ஹாட்ரிக்குடன் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

தொடர்ந்து ஆடிய விதர்பா அணியில் தொடக்க வீரர் ஃபாஸல் 67 ரன்களையும், வாசிம் ஜாஃபர் 78 ரன்களையும் எடுக்க கடைசியில் வர்கர் 133 ரன்களையும், சர்வடே 79 ரன்களையும், நேரல் 74 ரன்களையும் விளாச விதர்பா 547 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

தொடர்ந்து டெல்லி அணி தன் இரண்டாவது இன்னிங்சை இன்று ஆடத் தொடங்கி 280 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வெற்றி பெற தேவை 29 ரன்கள் விதர்பா அணி 5 ஓவர்களில் 32 எடுத்து வென்று வரலாறு படைத்தது.

இன்று காலை கவுதம் கம்பீர் பிரமாதமாக ஆடி 37 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் விளாசி ஹாட்ரிக் நாயகன் குர்பானி ரவுண்ட் த விக்கெட்டிலிருந்து வீசிய பந்தை நகர்ந்து வந்து லெக் திசையில் ஆடப்பார்த்தார், கால்காப்பில் வாங்கி எல்.பி.தீர்ப்பளிக்கப்பட்டார், மிகவும் தவறான தீர்ப்பு, பந்து லெக் ஸ்டம்பைத் தவற விட்டது ரீப்ளேயில் தெரிந்தது. முன்னதாக தொடக்க வீரர் சந்தேலா, ஆஃப் ஸ்பின்னர் வாக்ஹாரேயிடம் ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு முதல் இன்னிங்ஸ் சதம் அடித்த துருவ் ஷோரி, நிதிஷ் ரானே ஆகியோர் அரைசதங்களை எடுத்தனர். 3 கேட்ச்கள் மொத்தம் இவர்களுக்கு விதர்பா அணி தவற விட்டது. இருவருமே தேநீர் இடைவேளைக்கு முன்னதாக சர்வடேயிடமும், குர்பானியிடமும் முறையே ஆட்டமிழந்தனர். இம்முறை குர்பானி பந்தை வெளியே எடுக்க ரானா 64 ரன்களில் எட்ஜ் செய்து வெளியேறினார்.

கேப்டன் ரிஷப் பந்த் 36 பந்துகளில் 3 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 32 ரன்கள் எடுத்து நேரல் பந்தில் ஆட்டமிழக்க 222/6 என்பதிலிருந்து 280 ரன்களுக்குச் சுருண்டது டெல்லி அணி. ஆஃப் ஸ்பின்னர் வக்ஹாரே 4 விக்கெட்டுகளையும் சர்வடே 3 விக்கெட்டுகளையும், குர்பானி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். விதர்பா அணி தேவைப்படும் ரன்களை 5 ஓவர்களில் எடுத்து 32/1 என்று வெற்றி பெற்று வரலாறு படைத்தது. ஆட்ட நாயகனாக புதிய சுல்தான் ஆஃப் ஸ்விங் ரஜ்னீஷ் குர்பானி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்