பிலாண்டரின் பதற்றமடையா மேதைமை; நடுங்கிய இந்திய பேட்டிங்: தென் ஆப்பிரிக்கா பதிலடி வெற்றி

By ஆர்.முத்துக்குமார்

கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் 208 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்கொண்டு ஆடிய இந்திய அணி பதற்றத்துடன் விளையாடி 135 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது.

43-வது ஓவரில் அஸ்வின், மொகமது ஷமி, பும்ரா ஆகியோரை வீழ்த்தி 15.4 ஓவர்கள் 4 மெய்டன்களுடன் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வெர்னன் பிலாண்டர் மொத்தம் இந்த டெஸ்ட் போட்டியில் 75 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

பிலாண்டர் எனும் ‘ஜென்’ மன நிலை பவுலர்

தரவரிசையில் கடைநிலையில் இருக்கும் ஜிம்பாப்வேவுக்கு ஒன்றரை நாட்களில் உதை, தரவரிசையில் முதலிடம் வகிக்கும் இந்திய அணிக்கோ இரண்டே முக்கால் நாட்களில் உதை. தென் ஆப்பிரிக்காவுக்கு, ஜிம்பாப்வே அணிக்கும் இந்திய அணிக்கும் உள்ள வித்தியாசம் வெறும் ஒண்ணேகால் நாள்தான்! சுரங்க லக்மலை தடவு தடவென்று தடவிய இந்த அணி எப்படி இந்த ஓய்வு ஒழிச்சல் இல்லாத பந்து வீச்சை வெல்ல முடியும்?

இந்த டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து தென் ஆப்பிரிக்கா 48 பவுண்டரிகளை கொடுக்க இந்திய அணி முதல் இன்னிங்ஸில் மட்டும் 39 பவுண்டரிகள் 2 சிக்சர்களை வாரி வழங்கியது.

130 ரன்களுக்கு 2-வது இன்னிங்ஸில் ஆல் அவுட் ஆகி இந்திய அணிக்கு 208 ரன்களே வெற்றி இலக்காக இருந்த போதும் தென் ஆப்பிரிக்க அணி பவுலர்களிடத்தில் எந்த வித பதற்றமும் இல்லை, மாறாக இந்திய பேட்ஸ்மென்கள் ‘ஒரு வேளை வெற்றி பெற்று விடுவோமோ” என்ற பயத்தில் பதற்றத்தில் ஆடினார்களோ என்று தோன்றுகிறது. வெர்னன் பிலாண்டர் ஒரு ஜென் பவுத்த மனநிலையில் பந்து வீசினார்.

அணியின் 8 மற்றும் 9-ம் நிலை பேட்ஸ்மென்கள், அஸ்வின், புவனேஷ்வர் குமார் இணைந்து 94 பந்துகளை சந்தித்து 49 ரன்களை 8-வது விக்கெட்டுக்காகச் சேர்க்க முடியும் போது தவண், விஜய், புஜாரா, கோலி, ரோஹித் சர்மா அடங்கிய பேட்டிங் வரிசை மொத்தம் 117 பந்துகளை மட்டுமே சந்தித்து 76 ரன்களுக்கு அவுட் ஆவது என்றால் எப்படி அணி வெற்றி பெற முடியும்?

குறிப்பாக விராட் கோலி உலகின் நம்பர் 1 பேட்ஸ்மென், இரட்டைச் சத நாயகன் என்றெல்லாம் விதந்தோதப்பட்டவரை பிலாண்டர் ‘ஒர்க் அவுட்’ செய்ய முடிகிறது என்றால் இந்தத் தொடருக்கு முன் நாம், நம் ஊடகங்கள் விராட் கோலி பற்றி பேசிய ஊதிப்பெருக்கங்களை மறுபரிசீலனை செய்வதே முறை. பிட்ச் ஒன்றும் பேய்களை தன்னகத்தே கொண்டிருக்கவில்லை, இந்திய பவுலர்கள் 2-வது இன்னிங்சில் முதல் இன்னிங்ஸில் தவறை திருத்திக் கொண்டு சரியான இடத்தில் வீசி சுருட்டினர், தென் ஆப்பிரிக்க பவுலர்களும் அருமையான இடங்களில் பந்தைப் பிட்ச் செய்தனர். இந்நிலையில் உலகத்தரம் வாய்ந்த ஒரு பேட்ஸ்மென் என்று பெயரெடுத்த விராட் கோலி, வெர்னன் பிலாண்டர் 7-8 பந்துகளை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசும்போது ஒரு பந்து உள்ளே வரும் என்பதைக் கணித்திருக்க வேண்டும். ஆனால் அவரோ அந்தப் பந்தை நேராக ஆடுவதை விடுத்து ஏதோ அது பவுண்டரி பந்து போல் லெக் திசையில் பிளிக் ஆட முயன்றார், பந்து காற்றில் உள்ளே வந்ததைப் பார்க்கும் ஒரு வீரர் பந்தின் திசைக்கு நேராகத்தான் மட்டையைக் கொண்டு சென்றிருக்க வெண்டும், அந்தப் பந்தை நேராக ஆடியிருந்தால் அது மட்டையில் பட்டிருக்கும். ஆனால் காலியாக உள்ள லெக் திசை அவரை கவர்ந்திழுத்தது. இதுதான் பொறி. இதில்தான் சிக்கினார் விராட் கோலி.

அதுவரை 40 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் என்று ஆடி வந்தார். இறங்கியவுடன் ஒரு 5-6 ரபாடா வேகப்பந்துகள் அவரது கால்காப்பை வேகமாகத் தாக்கியபோதே சுதாரித்திருக்க வேண்டும்.

இன்னொரு ‘உள்ளூர் இரட்டைச் சதப் புலி’ ரோஹித் சர்மா. இவர் 10 ரன்கள் எடுத்து, அதுவும் தடுமாற்றத்துடனும் நடுக்கத்துடனும் எடுத்து, பிலாண்டரின் ஆஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியே சென்ற பந்தை காலை நன்றாக பிட்ச் ஆஃப் த பந்துக்கு கொண்டு சென்று ஆடியிருக்க வேண்டும், ஆனால் அரைகுறையாக நின்ற இடத்திலிருந்தே பந்தின் மீது மட்டையைத் தொங்க விட்டு உள்ளே வாங்கி விட்டுக் கொண்டு பவுல்டு ஆனார். மிகவும் பரிதாபத்துக்குரிய ஒரு பவுல்டாக இது அமைந்தது. விருத்திமான் சஹாவின் உத்தி அந்தப் பிட்ச்களுக்கோ, அந்த உயர்தரப் பந்து வீச்சுக்கோ உரியதல்ல என்பது நிரூபணமானது. ரபாடா இவருக்கும் ஓரிரு பந்துகளை லெந்தில் பிட்ச் செய்து வெளியே கொண்டு சென்றார், பிறகு அதே லெந்தில் ஒரு பந்தை உள்ளே கொண்டு வந்தார், கால்காப்பில் வாங்கி எல்.பி.ஆனார். எல்.பியாக இருந்தாலும் நடுவர் அவுட் கொடுப்பதை எதிர்பார்க்காமலேயே செல்ல வேண்டியதாகும் இது, ஆனால் மீண்டும் ஒரு ரிவியூவை வேஸ்ட் செய்து பெவிலியன் திரும்பினார்.

முதல் இன்னிங்ஸ் நாயகன் ஹர்திக் பாண்டியா என்ன செய்வார் பாவம்? பெரிய தலைகள் பதற்றமாக ஆடும் போது, இவரும் வித்தியாசமாக ஏதாவது செய்ய நினைத்து ஆடாமல் விட வேண்டிய பந்தை ஆடி எட்ஜ் செய்ய டிவில்லியர்ஸ் அபாரமாக கேட்ச் பிடித்தார். டிவில்லியர்ஸ் பேட்டிங் பார்மை விட அவரது பீல்டிங் பார்ம், கேட்சிங் இந்திய அணிக்கு வரும் போட்டிகளில் இரட்டை அச்சுறுத்தல்.

208 ரன்கள் இலக்கிற்கு இந்திய அணி தொடக்க வீரர்கள் 7 ஓவர்களில் 28 என்று நன்றாகவே தொடங்கினர். முரளி விஜய் இருமுறை அவுட் கொடுக்கப்பட்டு ரிவியூவில் தப்பினார், ஆனாலும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. பிலாண்டர் ஒரு முனையில் ஜென் மனநிலையில் வீச மறு முனையில் மோர்னி மோர்கெல் தனது பவுன்சினால் கடும் சிரமங்களைக் கொடுத்தார், இதில் ஒரு பந்து எகிற ஷிகர் தவண் புல் ஆடச் சென்றார், ஆனால் பந்து ஏடாகூடமாக பவுன்ஸ் ஆக முகத்துக்கு நேராக பேட்டைத் தூக்கி, தன் கால்களையும் தூக்கி எக்குத்தப்பாக ஆடப்போக பந்து பட்டு கல்லியில் கிறிஸ் மோரிசுக்கு எளிதான கேட்ச் ஆனது, புஜாராவுக்கும் ஒரு அற்புதமான ஷார்ட் பிட்ச் பந்து சற்றே எழும்பி வெளியே எடுத்தது, ஆடித்தான் ஆக வேண்டிய கட்டாயம் ஆடினார், கேட்ச் ஆனார்.

விராட் கோலி குறிக்கோளுடன் ஆடினார், நகர்ந்து வந்து முன்காலை முன்னால் நகர்த்தி ஆடினார், ஓரிரு பந்துகள் மட்டையில் படாமல் கால்காப்பில் பட்டிருந்தால் அவுட் என்ற நிலைதான் இருந்தது, ரபாடா இவரை ஒரு 6 முறையாவது இன்ஸ்விங்கரில் பேடைத் தாக்கியிருப்பார், ஆனால் இந்த வாய்ப்பை பிலாண்டர் அருமையாகப் பயன்படுத்தினார். ஒரு பந்தை லேசாக உள்ளே கொண்டுவர நேராக ஆட வேண்டிய கோலி ஒருநாள் போட்டி போல் பிளிக் செய்ய முயன்று வெளியேறினார். ரோஹித் சர்மாவுக்கு ரபாடா ஒரு அசுர பவுன்சரை வீச சிக்சர் தாதா அரைகுறை புல் ஷாட் ஆட மிட்விக்கெட்டில் மஹராஜ் கைக்கு வந்த கேட்சை விட்டார். 5 பந்துகள் சென்று பிலாண்டர் மீண்டும் ஒரு தளர்வான ஷாட்டை ஆட வைத்தார் ரோஹித் சர்மா பந்தை வாங்கி உள்ளே விட்டுக் கொண்டார்.

ஹர்திக் பாண்டியா முதல் இன்னிங்சில் கேட்ச் விடப்பட்ட அதே இடத்தில் 2-வது இன்னிங்சில் சிக்கினார். அஸ்வின் 53 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 37 ரன்களுக்கு நிதானத்துடனும் உறுதியுடனும் ஆடினார். ஆனால் அந்தக் குறிப்பிட்ட ஓவரில் பிலாண்டர் வீச வரும்போது குவிண்டன் டிகாக் ஸ்டம்புக்கு அருகில் வந்தார், அஸ்வின் இந்த வாய்ப்பை கட் ஷாட்டாக மாற்றப்பார்க்க எட்ஜ் ஆக டிகாக் மிகப்பிரமாதமாக ‘ரிப்ளெக்ஸ் ஆக்சன்’ கேட்ச் எடுத்தார். ஷமி, பும்ரா அதே ஓவரில் ஆட்டமிழக்க இந்தியா 42.4 ஓவர்களில் 135 ரன்களுக்குச் சுருண்டது. தொடரின் ஆரம்பத்தில் இந்தியாவுக்கு எதிராக சில கணக்குகளைத் தீர்க்க வேண்டியுள்ளது என்ற ரீதியில் தென் ஆப்பிரிக்க அணியினர் பேசி வந்தனர், அது அவர்களது ஆட்டத்தில் வெளிப்பட்டது, நடத்தையில் அல்ல.

இத்தகைய தரமான அணியை குண்டும் குழியுமான பிட்சைப் போட்டு இங்கு காலி செய்த போது உலகின் சிறந்த அணியாக அவர்கள் மனம் என்ன பாடுபட்டிருக்கும்? அதுதான் இப்போது இந்திய அணிக்கு திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்