தென் ஆப்பிரிக்காவில் இலங்கை அணி 2019-ல் சாதித்ததை இந்தியா சாதிக்குமா?

By ஆர்.முத்துக்குமார்

நாளை இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே பாக்சிங் டே டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் இதுவரை இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றதில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் வெற்றிக்கு அருகில் வந்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் தொடரை வென்ற ஒரே துணைக்கண்ட அணி இலங்கை என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கும். ஏனெனில் இலங்கை வீழ்த்திய தென் ஆப்பிரிக்க அணியும் ஃபாப் டு பிளெசிஸ் தலைமையிலான வலுவான அணிதான்.

2019ல் இலங்கை-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடந்த தொடரும், இப்போது இந்தியா ஆடுவது போல் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்தான். முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் நடைபெற்றது. தென் ஆப்பிரிக்காவில் எப்போதும் எதிரணி பவுலர்களை, பேட்டர்களை ஒன்றுமில்லாமல் அடிக்கும் ‘இந்திய ரக குழிப் பிட்ச்களோ’, முழு முற்றான கிரீன் டாப் பிட்ச்களோ போட மாட்டார்கள். எதிரணி பவுலர்களுக்கும் வாய்ப்பளிக்கும் பிட்ச்கள்தான் அங்கே போடப்படுகிறது.

அந்த வகையில் இலங்கைக்கு எதிராக டர்பனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியில் பிலாண்டர், ஸ்டெய்ன், ரபாடா, ஆலிவியர் என்று பவுலிங் யூனிட் வலுவாக இருந்தது. இவர்களை ஒப்பிடுகையில் இலங்கை அணி பலவீனமான அணியே. ஆனால் டர்பன் டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் விஸ்வா பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளையும், ரஜிதா 3 விக்கெட்டுகளையும் சாய்க்க தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 235 ரன்களுக்குச் சுருண்டது. குவிண்டன் டி காக் அதிகபட்சமாக 80 ரன்களை எடுத்தார். தொடர்ந்து ஆடிய இலங்கை அணி பவுன்ஸ் பிட்சினாலும் பிலாண்டர், ஸ்டெய்ன், ரபாடா போன்ற தேர்ந்த பவுலர்களாலும் 191 ரன்களுக்குச் சுருண்டது. கேப்டனும் தொடக்க வீரருமான திமுத் கருணரத்னே 30 ரன்களையும் குசல் பெரேரா 51 ரன்களையும் எடுத்தனர்.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் டேல் ஸ்டெய்ன் 4 விக்கெட்டுகளையும், பிலாண்டர் 3 விக்கெட்டுகளையும், ரபாடா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 44 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த தென் ஆப்பிரிக்கா தன் 2வது இன்னிங்சில் ஃபாப் டு பிளெசிஸ் (90), டி காக் (55) பேட்டிங்கினால் 95/4 என்ற நிலையிலிருந்து 259 ரன்களை எடுத்தது. மீண்டும் விஸ்வா பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற இடது கை சுழற்பந்து வீச்சாலர் எம்புல்டேனியா 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இலங்கைக்கு வெற்றி பெற 304 ரன்கள் இலக்கு. இலங்கை அனி 52/3 என்று தோல்வி முகம் காட்டியது. பிறகு 110 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. ஒரு முனையில் குசல் பெரேரா நின்று அற்புதமான ஒரு டெஸ்ட் இன்னிங்ஸை ஆடினார். முதலில் தனஞ்ஜெய டி சில்வாவுடன் (48) 94 ரன்கள் கூட்டணி அமைத்தார்.

ஆனால் மறு முனையில் விக்கெட்டுகள் சரமாரியாக விழ 226/9 என்று இலங்கை நிச்சயம் தோல்விதான் என்று மேட்சைப் பார்த்துக் கொண்டிருந்த நிலையில், 10வது பேட்டராக வந்த விஸ்வா பெர்னாண்டோ (6) ஒருமுனையில் உறுதியாக நிற்க குசல் பெரேரா சற்றும் நம்ப முடியாத ஒரு வெற்றியை இலங்கைக்குப் பெற்றுத் தந்தார். 200 பந்துகளில் 12 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் அவர் 153 நாட் அவுட். கடைசி விக்கெட்டுக்காக 78 ரன்கள் சேர்க்கப்பட்டது. தென் ஆப்பிரிக்கா அதிர்ச்சியடைந்தது. ஆல் டைம் கிரேட் இன்னிங்ஸில் குசல் பெரேராவின் இந்த இன்னிங்ஸ் இடம்பெறத்தக்கதே. ஆனால் சூப்பர் ஸ்டார் வீரர்கள் பின்னால் ஓடும் ஊடகங்களால் அப்போது குசல் பெரேராவின் இத்தகு சாதனை இன்னிங்ஸ் பெரிய அளவில் பேசப்படவில்லை.

2வது டெஸ்ட் போட்டி அப்போது போர்ட் எலிசபெத் என்ற பெயரைக் கொண்ட நகரில் நடைபெற்றது. இப்போது அதன் பெயர் கெக்கபெரா. மீண்டும் ரஜிதா, விஸ்வா பெர்னாண்டோ தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்த தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 222 ரன்களுக்குச் சுருண்டது. இலங்கை அணி முதல் இன்னிங்சில் 154 ரன்களுக்குச் சுருண்டது. ரபாடா 4 விக்கெட், ஆலிவியர் 3 விக்கெட். 2வது இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்காவை 128 ரன்களுக்குச் சுருட்டியது இலங்கை, சுரங்க லக்மல் 4 விக்கெட்டுகளையும், தனஞ்ஜய டி சில்வா 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். இலங்கைக்கு வெற்றி இலக்கு 197 ரன்கள். 34/2 என்னும் போது இலங்கை தோற்றுவிடும் என்று நினைத்த தருணத்தில் ஒஷாதா பெர்னாண்டோ 106 பந்துகளில் 75 ரன்களையும் குசல் மெண்டிஸ் 110 பந்துகளில் 84 ரன்களையும் விளாச இலங்கை அணி 197/2 என்று வெற்றி பெற்று தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வென்று கொடிநாட்டியது. இது இலங்கைக்கு ஒரு மிகப்பெரிய சாதனை தொடராகும்.

இத்தனைக்கும் இலங்கை அணி தென் ஆப்பிரிக்காவுக்கு அடிக்கடி செல்லாத அணி. ஆனால், இந்திய அணி 1992 முதலே ரெகுலராகச் செல்லும் அணி. ஆனால் இன்னமும் ஒரு டெஸ்ட் தொடரை வெல்ல முடியவில்லை. எதிரணியின் ஸ்பின்னர்களுக்குக் கூட தென் ஆப்பிரிக்கா பிட்ச் 4ம் நாள், 5ம் நாளில் உதவும். ஆஸ்திரேலியாவில் பந்தின் தையலை பிட்சில் அடித்து எழுப்பும் பவுலர்களுக்கே வாய்ப்பு கிடைக்கும். ஸ்விங் பவுலிங் செல்லுபடியாகாது. இங்கிலாந்து பிட்ச்கள் இப்போதெல்லாம் ஸ்பின்னுக்கு ஒன்றும் உதவுவதில்லை. தென் ஆப்பிரிக்காவில் ஸ்விங், சீம், ஸ்பின் ஆகியவற்றுக்கு உதவக்கூடியது, இதனால்தான் எதிரணி பவுலர்களும் சவாலாகத் திகழ்வார்கள். இப்படித்தான் தங்களைத் தாங்களே சவாலுக்குட்படுத்தும் பிட்ச்களை தென் ஆப்பிரிக்கா போடுவது வழக்கம்.

இந்த முறை தென் ஆப்பிரிக்கா பலவீனமாக இருப்பது போல் தெரியும். ஆனால் அவர்கள் மண்ணில் அவர்கள் தாதா தான். ஆனால் இலங்கை அந்தக் கோட்டையைத் தகர்த்தது. இந்திய அணியும் தகர்ப்பதற்கான ஆதாரங்கள் அணியில் உள்ளன. ஆனால் கேப்டன்சி, களவியூகம், டாஸ், அணித்தேர்வு என்று ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளன. பார்ப்போம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE