சர்வதேச கால்பந்து போட்டிகளில் 870-வது கோல்: ரொனால்டோ சாதனை

By செய்திப்பிரிவு

ரியாத்: சர்வதேச கால்பந்து போட்டிகளில் 870-வது கோலடித்து நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை புரிந்துள்ளார்.

சவுதியில் தற்போது புரோ லீக் கால்பந்து தொடர் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ள அல் நசீர் கால்பந்து அணியின் கேப்டனாக நட்சத்திர வீரர் ரொனால்டோ உள்ளார். போர்ச்சுக்கல் நாட்டு அணியின் மிகச் சிறந்த கால்பந்து வீரராக போற்றப்படுபவர் ரொனால்டோ.

இந்நிலையில் இந்த தொடரில் கடந்த வெள்ளிக்கிழமை ரியாத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் அல் எட்டிபா மற்றும் அல் நசீர் அணிகள் விளையாடின. மிகவும் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அல் நசீர் அணி 3 - 1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியைப் பெற்றது. அல் நசீர் அணி தரப்பில் அலெக்ஸ் டெல்ஸ், மார்செலோ புரோசோவிக், கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

அல் எட்டிபா அணி தரப்பில் முகமது அல் குவைகிபி ஒரு கோல் அடித்தார். இந்த ஆட்டத்தில் ரொனால்டோ அடித்த கோல் அவரது சர்வதேச கால்பந்து பயணத்தில் 870-வது கோலாக பதிவானது.

இதன்மூலம் சர்வதேச அளவில் அனைத்து போட்டிகளிலும் சேர்த்து அதிக கோல்கள் அடித்தவர்கள் வரிசையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ (870 கோல்கள்) முதலிடத்திலும், அர்ஜென்டினா வீரர் லயனல் மெஸ்ஸி (821 கோல்கள்) இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE