காயத்தால் ஆப்கன் தொடரில் இருந்து சூர்யகுமார் யாதவ் விலகல்

By செய்திப்பிரிவு

மும்பை: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரின் போது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் ஜனவரி 11ம் தேதி தொடங்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார்.

ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த 3வது டி20 போட்டியின்போது பீல்டிங் செய்யும் போது சூர்யகுமார் யாதவ்வுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இந்த காயம் குணமாக ஆறு வாரங்கள் ஆகும் என்பதால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் இருந்து விலகியுள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள பிசிசிஐ அதிகாரி ஒருவர், "காயம் காரணமாக சூர்யகுமார் யாதவால் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாட முடியாது. டெஸ்டுக்கு தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை என்பதால், ஐபிஎல்லில் விளையாடுவதற்கு முன்பு அவரது உடற்தகுதியை சரிபார்க்க பிப்ரவரி மாதம் நடக்கும் ரஞ்சி டிராபியில் மும்பைக்காக விளையாடுவார்" என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் காயத்தால் அவதிப்பட்டு வரும் ஹர்திக் பாண்டியாவும் தற்போதைக்கு இந்திய அணியில் இடம்பிடிக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே விரல் முறிவு காயத்தால் மற்றொரு இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தென் ஆப்பிரிக்க தொடரில் இருந்து விலகியுள்ளார். இஷான் கிஷன் சமீபத்தில் தென் ஆப்ரிக்க டெஸ்ட் தொடரில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக பங்கேற்கவில்லை. அவரும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் பங்கேற்பதில் சந்தேகம் நிலவுவதால், ஜிதேஷ் ஷர்மாவுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE