சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் தென் ஆப்பிரிக்காவின் டீன் எல்கர்

By செய்திப்பிரிவு

டர்பன்: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டீன் எல்கர். இந்தியாவுடனான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரே தான் பங்கேற்று விளையாடும் கடைசி தொடர் என தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது இந்திய கிரிக்கெட் அணி. டி20, ஒருநாள் கிரிக்கெட் தொடர்கள் முடிந்த நிலையில் வரும் 26-ம் தேதி தொடங்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் விளையாட உள்ளன. முதல் போட்டி சென்சூரியன் நகரிலும், இரண்டாவது போட்டி கேப்டவுன் நகரிலும் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள தென் ஆப்பிரிக்க டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எல்கர்.

சர்வதேச கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க அணிக்காக 84 டெஸ்ட் மற்றும் 8 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். தன்னுடைய 12 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் கேரியரில் 5000+ ரன்களை டெஸ்ட் கிரிக்கெட்டில் எடுத்துள்ளார். அவர டெஸ்ட் கிரிக்கெட் சராசரி 37.28. கடந்த 2012-ல் அவர் அறிமுக வீரராக களம் கண்டார்.

“கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பது எனது கனவு. அதுவும் தேசத்துக்காக சர்வதேச அளவில் விளையாடுவது சிறப்பானது. அதுவும் 12 ஆண்டுகளாக இதை செய்ய முடிந்தது மகத்தானது. இந்த பயணம் எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். அனைத்து நல்ல விஷயங்களுக்கும் முடிவு உள்ளது. அந்த வகையில் இந்திய அணியுடனான தொடர் எனது கடைசி சர்வதேச தொடர் என்பதை அறிவித்துக் கொள்கிறேன். உலகில் எனக்கு பிடித்த கேப்டவுன் நகரில் நான் கடைசியாக விளையாட உள்ளேன். இந்த மைதானத்தில் தான் எனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE