“சதத்தால் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் தொடங்கினார் சஞ்சு சாம்சன்” - கம்பீர்

By செய்திப்பிரிவு

பார்ல்: தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான சதத்தின் மூலம் சஞ்சு சாம்சன் சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் தடம் பதித்துள்ளார் என்று முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது இந்திய கிரிக்கெட் அணி. மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் சஞ்சு சாம்சன் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 110 பந்துகளை எதிர்கொண்ட சஞ்சு சாம்சன் சர்வதேச போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்து அசத்தினார். ஆனால், லிசாட் வில்லியம்ஸ் வீசிய 46-வது ஓவரில் கேட்ச் கொடுத்து 108 ரன்களுடன் வெளியேறினார். இவரின் சதத்தின் உதவியுடன் தென் ஆப்பிரிக்காவை எளிதாக வீழ்த்தியது இந்திய அணி.

நீண்ட நாட்களாகவே இந்திய அணியில் இடம்கிடைக்க போராடி வருகிறார் சஞ்சு சாம்சன். ஐபிஎல் போன்ற தொடர்களில் தனது திறமையை நிரூபித்த பின்பும் தொடர்ந்து அவர் இந்திய அணியில் இருந்து தேர்வு செய்வதில் இருந்து ஓரம்கட்டப்பட்டுவந்தார். உலகக் கோப்பை அணியிலேயே இடம்கிடைக்க வேண்டியவர் புறக்கணிக்கப்பட்டது சர்ச்சையானது. இந்த நிலையில் தான் விளையாடிய இரண்டாவது சர்வதேச போட்டியிலேயே சதத்தை பதிவு செய்து ஆச்சர்யப்படுத்தினார் சஞ்சு. இதையடுத்து இணையம் முழுவதும் அவர் குறித்த பேச்சாக தான் உள்ளது.

இதனிடையே, இந்த சதத்தின் மூலம் சஞ்சு சாம்சன் சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் தடம் பதித்துள்ளார் என்று முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மேலும் பேசிய கம்பீர், “சஞ்சுவுக்கு எவ்வளவு திறமை இருக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஐபிஎல்லில் அவர் விளையாடிய இன்னிங்ஸைப் பார்த்து நாங்கள் மட்டுமல்ல, அனைவரும் அதைப் பற்றி பேசியுள்ளனர். ஆனால் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான செஞ்சுரி மூலம் அவர் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் தொடங்கியுள்ளார். ஒரு வீரர் செஞ்சுரி எடுத்தால் அவர் தேர்வாளர்களைக் கவர்வது மட்டுமல்லாமல், அவரை தேசிய அணிக்கு தேர்வுசெய்ய தேர்வாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கும்.

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான சஞ்சுவின் செஞ்சுரியும் அப்படியானதுதான். தனது சிறப்பான நாக் மூலம் சஞ்சு தேர்வாளர்களை அசரடித்துள்ளார். அவரை அணியில் தேர்வு செய்ய வேண்டிய நிர்பந்ததுக்கு தேர்வாளர்களை தள்ளியுள்ளது. அடுத்த உலகக் கோப்பைக்கு இன்னும் நான்கு ஆண்டுகள் உள்ளன. அதுவரை தற்போது என்னை வகை பார்மில் உள்ளாரோ அதே பார்மில் சஞ்சு இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவரது கீப்பிங் காரணமாக, மிடில் ஆர்டரில் அவருக்கு நல்ல வாய்ப்பு உள்ளது" என்று புகழ்ந்து பேசியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE