தென் ஆப்பிரிக்காவில் இருந்து அவசரமாக இந்தியா திரும்பிய விராட் கோலி!

By ஆர்.முத்துக்குமார்

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே டிசம்பர் 26-ம் தேதி தொடங்கும் பாக்சிங் டே டெஸ்ட் போட்டிக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் விராட் கோலி, ‘குடும்ப பிரச்சனை’ காரணமாக அவசரம் அவசரமாக இந்தியா திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரிட்டோரியாவில் நடைபெற்று வரும் இந்திய அணி வீரர்களுக்கு இடையிலான 3 நாள் ஆட்டத்தில் கோலி பங்கேற்கவில்லை. மூன்று நாட்களுக்கு முன் இந்தியா திரும்ப அணி நிர்வாகத்திடம் அனுமதி பெற்றார். ஆங்கில இணைய ஊடகம் ஒன்றில் வெளியான செய்திகளின்படி கோலி அவசரம் அவசரமாக இந்திய திரும்பியதன் காரணம் என்ன என்பதில் தெளிவு இல்லை. ஆனால் கோலி டிசம்பர் 22 அன்று (வெள்ளிக்கிழமை) தென்னாப்பிரிக்காவுக்குத் திரும்புகிறார்.

தென்னாப்பிரிக்கா பயணத்தின் ஒருநாள் மற்றும் டி20 தொடரிலிருந்து கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது. அதைத் தொடர்ந்து மூன்று ஒருநாள் போட்டிகளில் ஆடியது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் டி20 தொடர் 1-1 என சமனமானது.

வியாழன் அன்று பார்லில் உள்ள போலன்ட் பார்க் மைதானத்தில் நடந்த 3வது இறுதி ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சன் முதல் சதம் அடித்ததன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என கைப்பற்றியது. தனது முதல் ஐந்து விக்கெட்டுக்கள் உட்பட 10 விக்கெட்டுகளை வீழ்த்திய அர்ஷ்தீப் சிங் தொடரின் நட்சத்திரமாகத் திகழ்ந்தார்.

2023 ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி தோல்வியடைந்த பிறகு கோலி எந்த போட்டியிலும் விளையாடவில்லை. உலகக் கோப்பையில் கோலி 11 போட்டிகளில் 765 ரன்கள் எடுத்து புதிய சாதனையை உருவாக்கினார். அதேபோல், சச்சின் டெண்டுல்கர் 2003 உலகக் கோப்பையில் எடுத்த 673 ரன்கள் சாதனையை கோலி முறியடித்தார். அதோடு 50வது ஒருநாள் சதத்தையும் எடுத்து உலக சாதனை புரிந்தார்.

இந்நிலையில், கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கோலி ஆகியோர் தென்னாப்பிரிக்காவில் டிசம்பர் 26 முதல் செஞ்சூரியனில் தொடங்க உள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு இந்திய அணிக்கு மீண்டும் திரும்புகின்றனர்.

தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்திய அணி இதுவரை டெஸ்ட் தொடர் ஒன்றைக் கூட வென்றதில்லை. இந்த முறை தென் ஆப்பிரிக்க அணி அதன் ஸ்டார் வீரர்கள் இல்லாமல் கொஞ்சம் நிலை தடுமாறிய அணியாக இருப்பதால் இந்திய அணிக்கு இந்த முறை தென் ஆப்பிரிக்க மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை வெல்ல வாய்ப்புக் கிடைத்துள்ளது. அதற்கு ஜாம்பவான் விராட் கோலி அவசியம். ஆனால், அவர் அவசரமாக இந்தியா திரும்பியது எதனால் என்று தெரியவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE