WI vs ENG | 4-வது டி20-ல் இங்கிலாந்து வெற்றி

By செய்திப்பிரிவு

தாரூபா: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 4-வது டி20 கிரிக்கெட் போட்டியில் பில் சால்ட்டின் அதிரடி சதத்தால் இங்கிலாந்து அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தாரூபாவில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 267 ரன்கள் குவித்தது. தனது 2-வது சதத்தை அடித்த தொடக்க வீரரான பில் சால்ட் 57 பந்துகளில், 10 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 119 ரன்கள் விளாசினார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய கேப்டன் ஜாஸ் பட்லர் 29 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் விளாசிய நிலையில் ஜேசன் ஹோல்டர் பந்தில் ஆட்டமிழந்தார்.

வில் ஜேக்ஸ் 9 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்து அகீல் ஹொசைன் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். லியாம் லிவிங்ஸ்டன் 21 பந்துகளில், 4 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 54 ரன்களும், ஹாரி புரூக் 6 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். சர்வதேச டி 20 போட்டிகளில் இங்கிலாந்து அணியின் அதிகபட்ச ரன் குவிப்பாக இது அமைந்தது. இதற்கு முன்னர் அந்த அணி 2019-ம் ஆண்டு நியூஸிலாந்துக்கு எதிராக 241 ரன்கள் எடுத்திருந்தது.

268 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 15.3 ஓவர்களில் 192 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக ஆந்த்ரே ரஸ்ஸல் 51, நிக்கோலஸ் பூரன் 39, ஷெர்பான் ரூதர்போர்டு 36, ஷாய் ஹோப் 16 ரன்கள் சேர்த்தனர். இங்கிலாந்து தரப்பில் ரீஸ் டாப்லி 3 விக்கெட்களையும் சாம் கரன், ரெஹான் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை 2-2 என்ற கணக்கில் சமநிலையை அடையச் செய்துள்ளது. கடைசி மற்றும் 5-வது டி20 ஆட்டம் நாளை (22-ம் தேதி) நடைபெறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE