சவுமியா சர்க்காரின் அதிரடி 169 ரன்கள் வீண்: ஒருநாள் தொடரை வென்றது நியூஸிலாந்து!

By ஆர்.முத்துக்குமார்

சாக்ஸ்டன் ஓவல்: நியூஸிலாந்துக்கு கிரிக்கெட் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி இன்று நெல்சன் மைதானத்தில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூஸிலாந்திடம் தோற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூஸிலாந்து கைப்பற்றியது.

டாஸ் வென்ற நியூஸிலாந்து முதலில் வங்கதேசத்தை பேட் செய்ய அழைத்தது. அந்த அணி 80 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது தொடக்க வீரர் சவுமியா சர்க்கார் 22 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 151 பந்துகளில் 169 ரன்களை விளாசியதுடன், முஷ்பிகுர் ரஹீமுடன் (45) 5வது விக்கெட்டுக்காக 91 ரன்களையும் சேர்த்தார். பிறகு டெய்லெண்டர்களின் சிறிய பங்களிப்பு உதவியுடன் பெரும்பான்மையான ரன்களை தனி மனிதராக அடித்துக் குவித்தார் சவுமியா சர்க்கார். இதனால் வங்கதேசம் 50 ஓவர்களில் 291 ரன்களை எட்டியது. நியூஸிலாந்து தரப்பில் ஜேக்கப் டஃபி, வில்லியம் ஓ ரூர்கே 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து அணியின் டாப் 5 வீரர்களின் அபாரமான பங்களிப்பினால் இலக்கை 46.2 ஓவர்களில் எடுத்து 296/3 என்று வெற்றி பெற்றுத் தொடரையும் வென்றது. நியூஸிலாந்து தரப்பில் வில் யங் 89 ரன்களையும், ரச்சின் ரவீந்திரா அதிரடி 45 ரன்களையும், ஹென்றி நிகோல்ஸ் 90 பந்துகளில் 95 ரன்களையும், கேப்டன் டம் லாதம் 34, டாம் பிளண்டெட்ல் 34 ரன்களையும் எடுத்து வென்று கொடுத்தனர். வங்கதேசம் தரப்பில் ஹசன் மஹ்மூது 2 விக்கெட்டுகளையும், ஷோரிபுல் இஸ்லாம் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். முதல் ஒருநாள் போட்டியில் டுனெடினில் 44 ரன்களில் நியூஸிலாந்து வென்றதையடுத்து தொடரை 2-0 என்று கைப்பற்றியுள்ளது.

வங்கதேச அணிக்குள் மீண்டும் வந்துள்ள சவுமியா சர்க்கார் அபாரமாக ஆடினார். 58 பந்துகளில் அரைசதம் கண்டார். ஈஸியான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டியும், அதேநேரம் சிங்கிள்ஸ் எடுப்பது என்று ஸ்ட்ரைக்கை அருமையாக சுழற்சிக்குட்படுத்தியும் சவுமியா சர்க்கார் பிரமாதமாக, ஒரு தரமுள்ள ஒருநாள் இன்னிங்ஸை ஆடினார். 35-வது ஓவரில் முஷ்பிகுர் 45 ரன்களில் வெளியேற, சவுமியா சர்க்கார் மீது மேலும் சுமை ஏறியது. மெஹதி ஹசன் மிராசுடன் 61 ரன்கள் கூட்டணி அமைத்த சவுமியா சர்க்கார் 116 பந்துகளில் தன் 3வது ஒருநாள் சதத்தை எடுத்து முடித்தார்.

ஒரு கட்டத்தில் 119 பந்துகளில் 112 ரன்களை எடுத்திருந்த சவுமியா அதன் பிறகு பேயாட்டம் ஆடினார். அடுத்த 32 பந்துகளில் 67 ரன்களை விளாசித் தள்ளினார். இதில் மட்டுமே 9 பவுண்டரிகள் 2 சிக்சர்களை விளாசினார். கடைசி ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்த வங்கதேசம் 291 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்தது.

ஆனால், நியூஸிலாந்து அணியின் வலுவான பேட்டிங்கின் முன் அந்த இலக்கு ஒன்றுமில்லாமல் தவிடுபொடியானது. இதனால் 2வது பெரிய வங்கதேச பேட்டரின் சதம் என்ற பெருமையை பெற்ற சவுமியா சர்க்காரின் சதம் வீணானது. எனினும் சவுமியா சர்க்காரின் இன்னிங்ஸ் அபாரமானது என்பது மிகையான கூற்றல்ல. இதற்காகவே நியூஸிலாந்து வென்றாலும் ஆட்ட நாயகன் விருது சவுமியா சர்க்காருக்கு வழங்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE