ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. இந்திய அணி வீரர்கள் அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான் ஆகியோரது சிறப்பான பந்துவீச்சால் இந்திய அணியின் வெற்றி எளிதானது.
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து டி20, ஒருநாள் கிரிக்கெட் போட்டி, டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற சர்வதேச டி20 தொடரானது 1-1 என்றகணக்கில் சமனில் முடிவடைந்தது. இந்நிலையில் நேற்று இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 27.3 ஓவர்களில் 116 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அர்ஷ்தீப் சிங், அவேஷ் கானின் அனல் பறக்கும் பந்துவீச்சில் தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட்கள் சீரான இடைவெளியில் விழுந்தன.
தொடக்க வீரர்கள் ரீசா ஹென்றிக்ஸ் 0, டோனி டே ஜோர்ஸி 28, வான் டெர் டஸ்ஸன் 0, ஹெய்ன்ரிச் கிளாசன் 6, ஆன்டிலே பெலுக்வாயோ 33 ஆகியோரை வெளியேற்றினார் அர்ஷ்தீப் சிங். கேப்டன் எய்டன் மார்க்ரம் 12 ரன்கள் சேர்த்து அவேஷ் கான் பந்தில் போல்டானார். அதைப் போலவே அதிரடி வீரர் டேவிட் மில்லர், அவேஷ் கான் பந்துவீச்சில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 2 ரன்கள் மட்டுமே சேர்த்தார். வியான் முல்டர் ரன் எடுக்காமலேயே அவேஷ் கான் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். கேசவ் மஹராஜ் 4 ரன்கள் சேர்த்த நிலையில் அவேஷ் கான் பந்தில், ருதுராஜ் கெய்க்வாட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
கடைசி விக்கெட்டாக நான்ட்ரே பர்கர், குல்தீப் யாதவ் பந்தில் போல்டானார். அவர் 7 ரன்கள் மட்டுமே எடுத்தார். தபரைஸ் ஷம்ஸி 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அணியில் அதிகபட்சமாக பெலுக்வாயோ 33 ரன்கள் சேர்த்தார். இல்லாவிட்டால் தென் ஆப்பிரிக்க அணி 100 ரன்களையே எட்டியிருக்காது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 10 ஓவர்கள் பந்துவீசி 37 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். அவேஷ் கான் 8 ஓவர்கள் பந்துவீசி 27 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களைச் சாய்த்தார். குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
பின்னர் 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட்டும், சாய் சுதர்ஷனும் களமிறங்கினர். ருதுராஜ் 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வியான் முல்டர் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். பின்னர் சாய் சுதர்ஷனுடன், ஸ்ரேயஸ் ஐயர் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தனர். இருவரும் அடுத்தடுத்து அரை சதங்களைக் கடந்தனர்.
52 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஸ்ரேயஸ் ஐயர், பெலுக்வாயோ பந்துவீச்சில் மில்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 6 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடங்கும். பின்னர் வந்த திலக் வர்மாவும், சாய் சுதர்ஷனும் வெற்றிக்குத் தேவையான ரன்களை எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தனர். 16.4 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.
சாய் சுதர்ஷன் 55 ரன்களும், திலக் வர்மா ஒரு ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். சாய் சுதர்ஷன் 43 பந்துகளில் இந்த ரன்களைக் குவித்தார். அவரது ஸ்கோரில் 9 பவுண்டரிகள் அடங்கும். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. ஆட்டநாயகனாக 5 விக்கெட்களை வீழ்த்திய அர்ஷ்தீப் சிங் தேர்வு செய்யப்பட்டார்.
நாளை 2-வது போட்டி: இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நாளை (டிசம்பர் 19) கெபர்ஹாவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 3-வது ஒருநாள் போட்டி, பார்ல் மைதானத்தில் டிசம்பர் 21-ம் தேதி நடைபெறவுள்ளது.
சாய் சுதர்ஷன் அபாரம்: அறிமுக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 50 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் வரிசையில் சாய் சுதர்ஷன் இணைந்தார். அறிமுகமான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 50 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் குவித்த 17-வது இந்திய வீரர் என்ற பெருமையை சாய் சுதர்ஷன் பெற்றார்.
மோசமான தோல்வி… இந்தியாவுடனான நேற்றைய ஆட்டத்தில் தோல்வி கண்டதன் மூலம் 2-வது மோசமான தோல்வியை தென் ஆப்பிரிக்க அணி பதிவு செய்துள்ளது. 200 பந்துகளை மீதம் வைத்திருந்த நிலையில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளதால் 2-வது மோசமான தோல்வியாக தென் ஆப்பிரிக்காவுக்கு இது அமைந்தது. முன்னதாக 2008- ல் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 215 பந்துகள் மீதமிருந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணி தோல்வி கண்டதே அந்த அணிக்கு மிகவும் மோசமான தோல்வியாக பதிவாகியுள்ளது.
5 விக்கெட் சாதனை: ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 5 விக்கெட்கள் வீழ்த்திய இந்திய வீரர்கள் வரிசையில் அர்ஷ்தீப் சிங் சேர்ந்துள்ளார். இதற்கு முன் இச்சாதனையை இந்திய வீரர்கள் சுனில் ஜோஷி, யுவேந்திர சாஹல், ரவீந்திர ஜடேஜா செய்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago