விஜய் ஹசாரே கோப்பை | முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ஹரியாணா!

By செய்திப்பிரிவு

ராஜ்கோட்: ந டப்பு விஜய் ஹசாரே கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ஹரியாணா அணி. இது அந்த அணி வெல்லும் முதல் விஜய் ஹசாரே கோப்பை ஆகும்.

இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் விஜய் ஹசாரே கோப்பை தொடரும் ஒன்று. நடப்பு ஆண்டுக்கான தொடர் கடந்த நவம்பர் மாதம் தொடங்கியது. இதில் தமிழ்நாடு கிரிக்கெட் அணி உட்பட மொத்தம் 38 அணிகள் பங்கேற்றன. தமிழ்நாடு அணி அரை இறுதி வரை விளையாடி இருந்தது. இறுதிப் போட்டியில் ஹரியாணா மற்றும் ராஜஸ்தான் அணிகள் விளையாடின. ராஜ்கோட்டில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஹரியாணா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்தது. அங்கித் குமார் 91 பந்துகளில் 88 ரன்கள் எடுத்தார். அசோக், 96 பந்துகளில் 70 ரன்கள் எடுத்தார். 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ராஜஸ்தான் விரட்டியது. அப்ஜித் தோமர், 106 ரன்கள் எடுத்தார். குணால் சிங் ரத்தோர், 65 பந்துகளில் 79 ரன்கள் எடுத்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 48 ஓவர்களில் ஆல் அவுட்டாகி 257 ரன்கள் எடுத்தது ராஜஸ்தான். இதன் மூலம் 30 ரன்கள் வித்தியாசத்தில் ஹரியாணா வெற்றி பெற்றது.

ஹரியாணா வீரர் சுமித் குமார் 6 ஓவர் வீசி, 34 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார். பேட்டிங்கில் 16 பந்துகளில் 28 ரன்கள் எடுத்திருந்தார். அவர் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE