“சுயமரியாதை முக்கியம்” - ரோகித் சர்மா நீக்கம் குறித்து ரசிகர்கள் அதிருப்தி 

By செய்திப்பிரிவு

மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

2013-ம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோகித் சர்மா தற்போது அந்த பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை கோப்பைகளை வென்று சாம்பியன் பட்டத்தை பெற்றது. தற்போது மும்பை அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். கேப்டன் பொறுப்பிலிருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஐந்து முறை ஐபிஎல் கோப்பைகளை வென்ற ரோகித் சர்மாவை நீக்கியது நியாயமற்றது என சமூக வலைதளங்களில் அவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

விஷால் என்ற ரசிகர் ஒருவர் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: ரோகித் ஷர்மாவுக்கு என்னுடைய பணிவான வேண்டுகோள். தயவுசெய்து இந்த அணியிலிருந்து விலகி விடுங்கள். சுயமரியாதையை விட பெரியது எதுவுமில்லை. நீங்கள் எப்போதும் எங்கள் கேப்டனாக இருப்பீர்கள். தயவு செய்து விலகி விடுங்கள்.

மற்றொரு மும்பை அணி ரசிகர் தனது பதிவில் கூறும்போது, “சச்சின் டெண்டுல்கரால் , மும்பை இந்தியன்ஸ் எனக்கு பிடித்த அணியாக இருந்தது. அவரது ஓய்வுக்கு பிறகு, நான் ரோகித் சர்மாவால் எம்ஐ அணியின் போட்டிகளைப் பார்க்க ஆரம்பித்தேன். ஆனால் மும்பை இந்தியன்ஸ் ரோகித் சர்மாவை விட்டுவிட்டு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக தேர்வு செய்துள்ளது. இதனால் நான் இனி எம்ஐ அணி ரசிகராக இருக்கப் போவதில்லை. ஆனால் ரோகித் சர்மாவின் போட்டிகளை தொடர்ந்து பார்ப்பேன். எம்ஐ அணியை வெறுக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மாதவ் சர்மா என்ற ரசிகர் ஒருவர் பதிவிட்டுள்ளதாவது: ஐந்து ஐபிஎல் கோப்பைகள். இனி எப்போதும் ரோகித் போன்ற ஒரு கேப்டன் மும்பை அணிக்கு கிடைக்க மாட்டார். இது ஒரு மோசமான முடிவு மற்றும் அணிக்கு மிகப்பெரிய இழப்பு. ஹர்திக் நல்ல போட்டியாளர்தான். ஆனால் ஒரு கேப்டனாக அவரால் ரோகித் சர்மாவின் அருகில் கூட வரமுடியாது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE