6 அணிகள் பங்கேற்கும் தமிழ்நாடு வாலிபால் லீக் ஜன.3-ல் தொடக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு வாலிபால் சங்கம் சார்பில் முதலாவது தமிழ்நாடு வாலிபால் லீக் போட்டிகள் வரும் ஜனவரி 3-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை சென்னை மைலாப்பூரில் உள்ள சாந்தோம் உயர் நிலைப்பள்ளியில் உள்ள உள்ளரங்க விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளன. இந்தத் தொடரில் சென்னை ராக்ஸ்டார்ஸ், விழுப்புரம் சூப்பர் கிங்ஸ், கிருஷ்ணகிரி புல்ஸ், விருதுநகர் கிங்மேக்கர்ஸ், குமரி பீனிக்ஸ், கடலூர் வித் அஸ் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்த அணிகளின் உரிமையாளர்களாக ஆர்.வி.எம்.ஏ.ராஜன், ஜி.வி.வெங்கடேஷன், எம்.பி.செல்வகணேஷ், ஏ.டி.கமலாசன், ஏ.சிவா ரமேஷ், பொன் கவுதம்சிகாமணி எம்.பி., ஆகியோர் உள்ளனர். இந்த போட்டி தொடர்பான அறிவிப்பு மற்றும் அணிகளின் அறிமுகம் நேற்று சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் உள்ள அரங்கில் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு வாலிபால் லீக் கமிட்டியின் தலைவர் ஆர்.அர்ஜூன் துரை, தமிழ்நாடு வாலிபால் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ.ஜே.மார்ட்டின் சுதாகர், பொருளாளர் எம்.பி.செல்வகணேஷ், முன்னாள் துணைத் தலைவர் ஆர்.கே.துரை சிங், உறுப்பினர்செயலர் சி.கேசவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் போட்டிக்கான லோகோ வெளியிடப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு அணியும் அவர்களுக்கான லோகோவும் அறிமுகப்படுத்தப்பட்டது.

தமிழ்நாடு வாலிபால் லீக் தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ.10லட்சம் ஆகும். போட்டிகள் ரவுண்ட்ராபின் முறையில் நடத்தப்பட உள்ளன. லீக் சுற்றில் முதலிடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். 2-வது மற்றும் 3-வது இடத்தை பிடிக்கும் அணிகள் பிளே ஆஃப் சுற்று ஆட்டத்தில் மோதும். இதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப் போட்டியில் கால்பதிக்கும். இந்தத் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.5 லட்சம் வழங்கப்பட உள்ளது. 2-வது இடத்தை பிடிக்கும் அணி ரூ.3 லட்சத்தையும், 3-வது இடத்தை பிடிக்கும் அணிரூ.2 லட்சத்தையும் பெறும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE