சென்னை லீக் சீனியர் டிவிசன் கால்பந்து போட்டியில் ஐசிஎப் அணி 3-1 என்ற கோல் கணக்கில் இந்திய உணவுக் கழக (எப்சிஐ) அணியைத் தோற்கடித்தது. இதன்மூலம் 3-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது ஐசிஎப். அதேநேரத்தில் எப்சிஐ அணி தான் விளையாடிய 4 ஆட்டங்களிலும் தோல்வி கண்டுள்ளது.
கார்த்திக், நிர்மல் கலக்கல்
சென்னை நேரு மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போட்டியில் ஐசிஎப் அணி ஆரம்பத்திலேயே ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. அந்த அணியின் ரைட் விங்கர் நிர்மல், லெப்ட் விங்கர் கார்த்திக் ஆகியோர் அபாரமாக ஆடினர். ஆட்டத்தின் 15-வது நிமிடத்தில் எப்சிஐ வீரர்களை பின்னுக்குத்தள்ளி அசத்தலாக பந்தை எடுத்துச் சென்ற நிர்மல், வலது முனையில் (கார்னர்) இருந்து பந்தை ‘கிராஸ்’ செய்ய, இடதுபுறத்தில் இருந்து முன்னோக்கி வந்த கார்த்திக் துல்லியமாக தலையால் முட்டி கோலடித்தார்.
எப்சிஐ ஸ்டிரைக்கர் ஆன்டோ 20 யார்ட் தூரத்தில் இருந்து பந்தை கோல் கம்பத்துக்கு அடிக்க, அதை ஐசிஎப் கோல் கீப்பர் சதீஷ்குமார் சரியாக கேட்ச் செய்தார். தொடர்ந்து அபாரமாக ஆடிய நிர்மல் வலது புறத்தில் இருந்தபடியே அடுத்தடுத்து இரு கோல் வாய்ப்புகளை உருவாக்கினார். ஆனால் முதல் வாய்ப்பில் கார்த்திக் அடித்த பந்து கோல் கம்பத்துக்கு மேலே பறக்க, அடுத்த வாய்ப்பை ஜெயக்குமார் கோட்டைவிட்டார்.
தொடர்ந்து அபாரமாக ஆடிய ஐசிஎப் அணியில் பின்கள வீரர் சுமன்ராஜ், 35 யார்ட் தூரத்தில் இருந்து நேரடியாக கோல் கம்பத்தை நோக்கி உதைக்க, மிகத்துல்லியமாக கோல் கம்பத்துக்கு பறந்தது பந்து. அது கோலாகும் என எல்லோரும் எதிர்பார்த்த வேளையில் எப்சிஐ கோல் கீப்பர் மணிகண்டன், ஒரு ‘ஜம்ப்’ செய்து ஒரு கையால் பந்தை தடுத்தார்.
41-வது நிமிடத்தில் இடதுபுறத்தில் இருந்த ஐசிஎப் வீரர் கார்த்திக்கிடம் பந்து செல்ல, அவர் அதை துல்லியமாக ‘கிராஸ்’ செய்ய, கோல் கம்பத்தின் முன்நின்ற ஸ்டிரைக்கர் ஜெயக்குமார் தலையால் முட்டி கோலடித்தார். அப்போது எப்சிஐ பின்கள வீரர்கள் அங்கிருந்தபோதும், கோலை தடுக்கத் தவறிவிட்டனர்.
முதல் பாதி ஆட்டத்தின் கடைசி 3 நிமிடங்களில் எப்சிஐ அணிக்கு இரு கோல் வாய்ப்புகள் கிடைத்தபோதும், கோட்டைவிட்டது.
மாற்றத்தால் பலன்
பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் எப்சிஐ அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டன. ஸ்டிரைக்கர் ஜான் பால், செந்தில் குமார் ஆகியோருக்குப் பதிலாக சந்தோஷ் குமார், மாருதி பாண்டே ஆகியோர் களம்புகுந்தனர். இவர்கள் இருவரும் மிட்பீல்டில் ஆட, முதல் பாதி ஆட்டத்தில் ரைட் விங்கராக இருந்த ரவீந்திரன் ஸ்டிரைக்கர் ஆனார். அதற்குப் பலனும் கிடைத்தது.
53-வது நிமிடத்தில் ரவீந்திரன், மற்றொரு ஸ்டிரைக்கர் ஆன்டோவிடம் பந்தை ‘பாஸ்’ செய்ய, அதை சரியாக கேட்ச் செய்த ஆன்டோ, அதேவேகத்தில் கோலடித்தார்.
பெனால்டி ‘மிஸ்’
இதன்பிறகு ஐசிஎப் அணிக்கு பெனால்டி கிக் வாய்ப்பு கிடைக்க, அதை டேவிட் வீணடித்தார். எப்சிஐ கீப்பர் மணிகண்டன் கோல் கம்பத்தின் இடதுபுறத்தில் நின்ற நிலையில், அதே திசையில் டேவிட் பந்தை உதைத்தார். இதனால் மணிகண்டன் எளிதாக ‘சேவ்’ செய்தார்.
இதன்பிறகு இரு அணிகளும் அபாரமாக ஆடினாலும், ஐசிஎப் அணிக்கு ஒரு சில வாய்ப்புகள் வீணான நிலையில், எப்சிஐ அணியும் சில வாய்ப்புகளை கோட்டைவிட்டது. எப்சிஐ மிட்பீல்டர் மாருதி பாண்டே தன்னிடம் வந்த பந்தை வேகமாக எடுத்துச் சென்று கோலடிக்காமல், தன்வசம் வைத்துக் கொண்டே திணறினார். அதற்குள் ஐசிஎப் பின்கள வீரர்கள் சூழ்ந்துவிட, நல்ல கோல் வாய்ப்பு ஏமாற்றத்தில் முடிந்தது.
இழப்பை ஈடு செய்த டேவிட்
‘இஞ்சுரி’ நேரத்தில் (90+2) ஐசிஎப் ஸ்டிரைக்கர் வெங்கடேசன் கொடுத்த நல்ல ‘கிராஸில்” டேவிட் கோலடிக்க, ஐசிஎப் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. பெனால்டி வாய்ப்பை கோட்டை
விட்ட டேவிட், கடைசிக் கட்டத்தில் கோலடித்து ஆறுதல் தேடிக் கொண்டார். எப்சிஐ ஸ்டிரைக்கர் ஆன்டோ ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
ஸ்டார் ஜுவனைல் வெற்றி
முதல் டிவிசன் லீக் போட்டியில் ஸ்டார் ஜுவனைல் 2-0 என்ற கோல் கணக்கில் மெட்ராஸ் ஸ்போர்ட்டிங் யூனிட் அணியைத் தோற்கடித்தது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago