ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரை வென்றது அயர்லாந்து

By செய்திப்பிரிவு

ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது.

ஹராரேவில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற 3-வது டி 20 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணியானது 6 விக்கெட்கள் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரியான் பர்ல் 36, பிரையன் பென்னெட் 27, கிளைவ் மதன்டே 27, வெஸ்லி மாதேவேரே 14 ரன்கள் சேர்த்தனர். அயர்லாந்து அணி சார்பில் ஜோஷ் லிட்டில், கரேத் டெலானி, கிரெய்க் யங் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

141 ரன்கள் இலக்குடன் பேட் செய்த அயர்லாந்து 18.4 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 141 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஹாரி டெக்டர் 45 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 54 ரன்களும் ஜார்ஜ் டாக்ரெல் 32 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 49 ரன்களும் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர். முன்னதாக ஆண்டி பில்பிர்னி 13, பால் ஸ்டிர்லிங் 6, லார்கன் டக்கர் 8, கர்திஸ் கேம்பர் 5 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி கோப்பையை வென்றது. முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே ஒரு விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் அயர்லாந்து 4 விக்கெட்கள் வித்தியாசத்திலும் வெற்றி கண்டிருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE