தெ
ன் ஆப்பிரிக்க மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி இதுவரை டெஸ்ட் தொடரை வென்றது இல்லை. இம்முறை இந்த சோகத்துக்கு முடிவுகட்டும் எண்ணத்துடன் தென் ஆப்பிரிக்க மண்ணில் கால்பதித்துள்ளது ஆக்ரோஷமாக விளையாடக்கூடிய விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி.
1992-93ம் ஆண்டு முதல் 2013-14ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் இந்திய அணி 6 முறை தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில் ஒரு முறை மட்டும் தான் இந்திய அணி தொடரை இழக்காமல் சமன் செய்தது. 2010-2011ம் ஆண்டு தோனி தலைமையிலான அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமன் செய்து தொடரை இழக்காமல் தப்பித்தது.
கடைசியாக 2013-2014ம் ஆண்டு இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் விளையாடியது. 2 போட்டிகள் கொண்ட இந்த தொடரை இந்தியா 0-1 என பறிகொடுத்தது. இந்த சுற்றுப்பயணத்துக்கும் தோனியே கேப்டனாக இருந்தார். தோனியின் டெஸ்ட் போட்டிகளின் கடைசி கட்ட நாட்கள் இந்த தொடரில் இருந்துதான் கிட்டத்தட்ட ஆரம்பமானது. அந்தத் தொடரில் விளையாடிய சுமார் 12 வீரர்கள் தற்போதைய அணியிலும் உள்ளனர். இந்திய கிரிக்கெட்டில் ’நால்வர் கூட்டணி’ என வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, ராகுல் திராவிட், லட்சுமண் ஆகியோர் விடை பெற்ற நிலையில் விராட் கோலி, புஜாரா, ரஹானே, ரோஹித் சர்மா என இளம் கூட்டணியுடன் அந்தத் தொடரை இந்திய அணி சந்தித்திருந்தது.
ஆனால் 2010-2011ம் ஆண்டு தொடரில் சச்சின், லட்சுமண், டிராவிட், சேவக், கதவும் காம்பீர் என வலுவான மட்டையாளர்களுடனும் ஜாகீர்கான், ஹர்பஜன்சிங் போன்ற அனுபவமிக்க பந்து வீச்சாளர்களுடனும் தென் ஆப்பிரிக்க அணியை அணுகியிருந்தது. அந்த மண்ணில் இந்திய அணி இதுவரையிலும் சிறப்பாக விளையாடிய தொடர் இதுவாகத்தான் உள்ளது. இதற்கு அப்போதைய பயிற்சியாளர் கிரிஸ்டனும் மெனக்கெட்டிருந்தார். இதன் விளைவாகவே தென் ஆப்பிரிக்காவால் இந்திய அணியை முழு அளவில் ஆதிக்கம் கொள்ள முடியாமல் போனது.
தோராயமாக கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அணியில் உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களாக கருதப்பட்ட சச்சின், திராவிட், கங்குலி, லட்சுமண், சேவக், தோனி மற்றும் பந்து வீச்சாளர்களான ஜாகீர்கான், அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் என வலுவான வீரர்களை கொண்டு இந்திய அணி விளையாடிய போதிலும் தென் ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்வது இந்திய அணிக்கு எட்டாக்கனியாகவே அமைந்தது. இதுவரை தென் ஆப்பிரிக்காவில் 6 டெஸ்ட் தொடர்களை இந்திய அணி 5 கேப்டன்களின் கீழ் சந்தித்துள்ளது. இதில் இருமுறை தலைமை வகித்துள்ள தோனி ஒருமுறை மட்டும் தொடரை இழக்காமல் சிறப்பு சேர்த்தார்.
1992-93ல் அசாருதீன் தலைமையில் 4 போட்டிகள் கொண்ட தொடரை 1-0 எனவும், 1996-1997ல் சச்சின் தலைமையில் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கிலும், 2001-2002ல் கங்குலி தலைமையில் 2 போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்ற கணக்கிலும், 2006-2007ல் ராகுல் திராவிட் தலைமையில் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கிலும் இழந்துள்ளது இந்திய அணி.
வெளிநாட்டு மண்ணில் தொடரை வெல்ல முடியாததால் இந்திய அணிக்கு ‘மோசமான சுற்றுப்பயனாளர்கள்’ என்ற அவப்பெயரும் உள்ளது. இந்திய கிரிக்கெட்டில் கடந்த 10 ஆண்டுகாலத்தில் உலக அரங்கில் பல்வேறு சாதனைகள் படைத்த வீரர்கள் அணியில் இடம் பிடித்திருந்தனர். இதனால் சில வெளிநாட்டுப் பயணங்களுக்கு இந்திய அணி புறப்படும்போது இம்முறை நிச்சயம் இந்திய அணிநல்ல முடிவுகளை கொடுக்கும் என ரசிகர்கள் மத்தியில் ஆவல் எழும்.
ஆனால் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட அயல்நாட்டு மண்ணில் இந்திய அணியின் முடிவுகள் வழக்கமான ஒன்றாக அமைந்துவிடும். இம்முறையும் எதிர்பார்ப்புக்கு பஞ்சமில்லை. இது ஒருபுறம் இருக்க வேகப்பந்து வீச்சுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்த வேண்டிய கடினமான இந்தத் தொடருக்கு எந்தவித முன்தயாரிப்புகளும் இல்லாத நிலையில் சவால்களை எதிர்நோக்குகிறது விராட் கோலியின் படை. ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த 2 நாட்கள் பயிற்சி ஆட்டத்தையும் இந்திய அணி ரத்து செய்துள்ளது.
இதற்கு பதிலாக தென் ஆப்பிரிக்காவில் பயிற்சிக்காக கூடுதல் நேரத்தை செலவிட்டு வருகின்றனர் இந்திய அணி வீரர்கள். சவால்களை எதிர்கொள்ளும் இந்திய அணியினர் சில விஷயங்களை சரி செய்ய வேண்டிய கட்டாயத்திலும் உள்ளனர். கடந்த இரு ஆண்டுகளாக இந்திய அணியினர் தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடர்களை வென்ற போதிலும் சவால் கொடுக்கும் புல்தரை ஆடுகளங்களில் பேட் செய்யவில்லை. மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் கூட இந்தியாவில் அமைக்கப்படுவது போன்ற ஆடுகளங்களே கிடைத்தன.
கடைசியாக இலங்கை அணிக்கு எதிராக புல்தரை ஆடுகளமான கொல்கத்தா ஈடன் கார்டனில் இந்தியா விளையாடிய போது முதல் நாளிலேயே ஆட்டம் கண்டது. பந்துகள் நகரும் விதத்துக்கு தகுந்த அளவில் நேர்த்தியாக பேட் செய்ய இந்திய வீரர்கள் தவறினர். ஆனால் 2-வது இன்னிங்ஸில் சுதாரித்தனர். இலங்கை அணி பலவீனமாக இருந்ததால் பேட்டிங்கை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால் தென் ஆப்பிரிக்கா போன்ற ஒரு அணி, புல்தரை ஆடுகளத்தில் பேட்டிங்கின் போது கிடைக்கும் வாய்ப்பை தவறவிடாது.
இந்திய அணி பேட்டிங்கில் இம்முறை புஜாரா, விராட் கோலி, அஜிங்க்ய ரஹானே ஆகியோரை பெரிதும் சார்ந்திருக்கும் என கருதப்படுகிறது. இவர்களுடன் தொடக்க வீரர்களும் அடித்தளம் அமைப்பது அவசியம். எல்லாவற்றுக்கும் மேலாக நெருக்கமாக அமையும் ஆட்டங்களில் 6, 7 மற்றும் 8-வது நிலைகளில் களமிறங்கும் பேட்ஸ்மேன்கள் ஆட்டத்தின் முடிவை தீர்மானிக்கக்கூடிய முக்கிய காரணிகளில் ஒன்றாகவும் விளங்கக்கூடும். ஏனெனில் டாப் ஆர்டரும், மிடில் ஆர்டரும் கைகொடுக்காத பட்சத்தில் பின்களம் தான் அணியை முன்னெடுத்துச் செல்லும்.
நடுகள வீரரான ரஹானேவின் பார்மும் சமீபகாலமாக கவலையளிக்கும் வகையில் உள்ளது. வலுவில்லாத இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரில் அவர் ஒட்டுமொத்தமாக 17 ரன்களே சேர்த்தார். இந்த சூழ்நிலையில் வேறு ஒரு பேட்ஸ்மேனாக இருந்திருந்தால் இதுதான் அவரது கடைசி டெஸ்ட் போட்டியாக இருந்திருக்கும். ஆனால் தற்போதைய அணியின் வடிவமைப்பில் துணை கேப்டனான ரஹானே, அயல்நாட்டு மண்ணில் எந்த சூழ்நிலைகளிலும் ரன்கள் சேர்க்கக்கூடியவராக கருதப்படுகிறார். தென் ஆப்பிரிக்காவில் ரன்குவிப்பு சராசரியை 70 ஆக வைத்துள்ள ரஹானே மீண்டும் பார்முக்கு திரும்புவது அவசியம்.
அடுத்தது சிலிப் பீல்டிங்கில் இந்திய அணி கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தற்போது பயிற்சியின் போது சிலிப் திசையில் பீல்டிங் செய்யும் ஒவ்வொரு வீரரரும் 50 முதல் 100 முறை கேட்ச் செய்து பழகுகின்றனர். ஆனால் இலங்கை அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் விராட் கோலி, ஷிகர் தவண், ரோஹித் சர்மா ஆகியோர் சிலிப் திசையில் கேட்ச்களை கோட்டைவிட்டனர். இவர்கள் 3 பேரும் தான் தற்போதைய நிலையில் சிலிப் திசையில் சிறப்பாக கேட்ச் செய்யும் ஆகச்சிறந்த வீரர்களாக உள்ளனர்.
தென் ஆப்பிரிக்க ஆடுகளங்களில் பந்துகள் அதிவேகத்திலும் கணிசமான உயரத்திலும் சிலிப் திசையை நோக்கி பாயும். ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற கனவை நனவாக்க வேண்டும் என்றால் சிலிப் திசை கேட்ச்களை அதிக விழிப்புடன் எடுக்க வேண்டும். ஒரு கேட்ச் தவறினாலும் அது ஆட்டத்தின் முடிவை மாற்றும் அளவுக்கு கொண்டு சென்றுவிடும். முதல் டெஸ்ட் போட்டி தொடங்க இரு நாட்களே உள்ள நிலையில் ஷிகர் தவண் கணுக்கால் காயத்தால் அவதிப்படுவது சற்று பின்னடைவை கொடுத்துள்ளது. எனினும் கே.எல்.ராகுல் மாற்று வீரராக இருப்பது கூடுதல் பலம்தான். அவர், முரளி விஜயுடன் களமிறங்க ஆயத்தமாகி வருகிறார். தென் ஆப்பிரிக்க ஆடுகளத்தில் முதன்முறையாக களமிறங்க உள்ள ராகுலுக்கு சோதனை காத்திருக்கிறது.
மேலும் சுழலுக்கு ஒத்துழைக்காக ஆடுகளங்களில் அஸ்வின், ஜடேஜாவின் பயன்பாடு எந்த வகையில் இருக்கும் என்ற கேள்விகளும் எழாமல் இல்லை. உள்நாட்டு சீசனில் இவர்கள் இருவரும் தான் அதிக ஓவர்களை வீசி உள்ளனர். ஆடுகளம் சுழலுக்கு சாதமாக அமையும் போது அஸ்வினும், சுழலுக்கு உதவாத சமயங்களில் ரவீந்திர ஜடேஜாவும் அதீத திறனை வெளிப்படுத்தினர். எனினும் விளையாடும் லெவனில் அஸ்வின் முன்னிலைப்படுத்தப்படலாம். ஹர்திக் பாண்டியா இடம் பெறும் பட்சத்தில் இந்திய அணி 5 பந்து வீச்சாளர்களுடன் ஆட்டத்தை அணுகலாம். பவுன்ஸ் ஆடுகளங்களில் 4 வேகங்கள், ஒரு சுழற் பந்து வீச்சாளர் என்பது வலுவான அணிச்சேர்க்கை தான். மேலும் பாண்டியாவால் அணி சமச்சீரான நிலையையும் அடையும். பேட்டிங், பந்து வீச்சில் இம்முறை ஒவ்வொரு வீரர்களும் எந்த மாதிரியான பங்களிப்பை செய்ய வேண்டும் என உணர்ந்திருப்பதாக கருதப்படுகிறது. இதனால் ஒரு குழுவாக ஒன்றிணைந்து விளையாடினால் வெற்றிக்கான தருணங்கள் வெகுதொலைவில் இல்லை.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago