2011 உலகக் கோப்பை வெற்றியின்போது யுவராஜ் சிங்குக்கு போதுமான பாராட்டுகள் கிடைக்கவில்லை: கவுதம் கம்பீர் வருத்தம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: 2011-ம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை வெற்றியின்போது மிகச் சிறப்பாக விளையாடிய யுவராஜ் சிங்குக்கு போதுமான பாராட்டுகள் கிடைக்கவில்லை என்று இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரரும், பாஜக எம்பியுமான கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 1983-ம் ஆண்டு முதல் முறையாக ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பையை கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து 28 ஆண்டுகளுக்குப் பின்னர் எம்.எஸ்.தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2011-ல் உலகக் கோப்பையை வென்றது. இந்தியாவில் நடைபெற்ற இப்போட்டியின் இறுதி ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி, இந்திய அணி பட்டம் வென்றது.

இந்த உலகக் கோப்பையை வெல்வதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒருவராக இருந்தவர் யுவராஜ் சிங். இடதுகை அதிரடி பேட்ஸ்மேனான யுவராஜ் சிங் இந்தத் தொடரில் 362 ரன்களைக் குவித்தார். மேலும் 15 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்தார். முக்கியமான ஆட்டங்களில் அவரது அதிரடி கைகொடுத்தது. இதனால் இந்திய அணி கோப்பையை 2-வது முறையாகக் கைப்பற்றி சாதனை படைத்தது. அதுமட்டுமல்லாமல் உலகக் கோப்பை தொடர் நாயகனாகவும் யுவராஜ் சிங் தேர்வு செய்யப்பட்டார். இந்தத் தொடரில் அதிரடியாக விளையாடியிருந்த இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 482 ரன்கள் குவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 2011 உலகக் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய யுவராஜ் சிங்குக்கு போதுமான பாராட்டுகள் கிடைக்கவில்லை என முன்னாள் இந்திய அணி வீரர் கவுதம் கம்பீர் சர்ச்சையை எழுப்பி உள்ளார்.

இதுதொடர்பாக கவுதம் கம்பீர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

2011 உலகக் கோப்பையின்போது யுவராஜ் சிங் தொடர் நாயகன்விருதை வென்றது அனைவருக்கும் தெரியும். அந்தத் தொடரின்போது இதுகுறித்து எத்தனை பேர் பேசினார்கள்? யார் யாரெல்லாமல் பாராட்டுகளைத் தெரிவித்தார்கள்?

யுவராஜ் சிங் குறித்து பேசாததற்கு காரணம் என்ன? அவரை விளம்பரப்படுத்திக் கொள்ள மக்கள் தொடர்புக் குழுவினர் என தனியாக ஒன்று இல்லை என்பது காரணமாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.

அந்தத் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடினார் யுவராஜ் சிங். இதனை களத்தில் இருந்து பார்த்தவன் நான். அதனால்தான் அவருக்கு தொடர்நாயகன் விருது கிடைத்தது.

நீங்கள் ஒருவரை பற்றி அதிகமாக பேசவில்லை என்றாலும், அவரை மக்களிடத்தில் அதிகம் கொண்டு செல்லவில்லை என்றாலும் அவர் அதிகமாக வெளியில்தெரியமாட்டார். அவருக்கு கிடைக்க வேண்டிய உரிய பாராட்டுகிடைக்காது. ஒருவரை மட்டுமேதொடர்ந்து மக்கள் முன் விளம்பரப்படுத்திக் கொண்டிருந்தால் அவர்ஒரு தனி `பிராண்டாக' மாறிவிடுவார். யுவராஜ் சிங்குக்கு அப்போது போதுமான பாராட்டுகள் கிடைக்கவில்லை என்பது எனக்கு தனிப்பட்ட முறையில் வருத்தம்தான்.

மிகுந்த மகிழ்ச்சி: நடந்து முடிந்த ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பையில் ஒரு நல்ல விஷயம் நடந்துள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. பேட்டிங்கை நம்பியுள்ள அணியாக இல்லாமல் பந்துவீச்சை மையப்படுத்தும் அணியாக இந்திய அணி மாறி உள்ளது.

முகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா,முகமது சிராஜ் ஆகியோரின் கடினமாக உழைப்பு பாராட்டுகளுக்கு உரியதாகும். அதைப் போலவே ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ்ஆகியோரும் அபாரமாக பந்துவீசினர். இவ்வாறு கவுதம் கம்பீர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE