உலகக் கோப்பை போட்டிகள் நடந்த பெரும்பாலான பிட்ச்கள் ‘ஆவரேஜ்’ - ஐசிசி மதிப்பீடு

By ஆர்.முத்துக்குமார்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) நடந்து முடிந்த உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே அகமதாபாத்தில் நடந்த இறுதிப் போட்டி மற்றும் ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா இடையே கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் நடந்த அரையிறுதிப் போட்டி ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்பட்ட பிட்ச்கள் ‘சராசரி’ பிட்ச் என்று தன் மதிப்பீட்டை வழங்கியுள்ளது.

ஐசிசி மேட்ச் ரெஃப்ரி ஆண்டி பைக்ராஃப்ட், நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டிக்கான பிட்சை மதிப்பீடு செய்ய கொல்கத்தாவில் நடந்த அரையிறுதிப் போட்டியின் ஆடுகளத்தை முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத் மதிப்பிட்டார்.

இறுதிப் போட்டியின் பிட்ச்: இறுதிப் போட்டி என்று மரியாதையின்றி, புதிய பிட்சை போடாமால், ஏற்கெனவே இந்தியா-பாகிஸ்தான் நடந்த அதே பிட்சில் இறுதிப் போட்டியை நடத்தி இந்தியா தன் குழியைத் தானே தோண்டிக்கொண்டது. மந்தமான அகமதாபாத் விக்கெட்டில் முதலில் பந்துவீசத் தேர்ந்தெடுத்த ஆஸ்திரேலியா இந்தியாவை 50 ஓவர்களில் 240 ரன்களுக்குக் கட்டுப்படுத்தியது. இந்த பிட்சில் இந்த இலக்கு போதாது, அதுவும் விளக்கு வெளிச்சத்தில் பந்துகள் மட்டைக்கு நன்றாக வரத்தொடங்கியதையடுத்து டிராவிஸ் ஹெட் 120 பந்துகளில் 137 ரன்களை விளாச பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 43 ஓவர்களில் இலக்கை வெற்றிகரமாகத் துரத்தியது.

அக்டோபர் 14 அன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதலுக்குப் பயன்படுத்தப்பட்ட அதே பிட்ச் இறுதிப் போட்டியில் பயன்படுத்தப்பட்டது குறித்து ஆஸ்திரேலியர்கள் கவலை தெரிவித்ததாக பல தகவல்கள் கூறுகின்றன. ஆனால் போட்டிக்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸ் அதை ஒரு 'நல்ல பிட்ச் ' என்று குறிப்பிட்டாலும், முன்னாள் அணித்தலைவர் ரிக்கி பாண்டிங் கூறுகையில், இறுதிப் போட்டிக்குத் தயாரிக்கப்பட்ட ஆடுகளம் இந்திய அணிக்குப் பின்னடைவை ஏற்படுத்தியது என்றார்.

அரைஇறுதிப் பிட்ச்: ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தாவில் நடந்த ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது அரையிறுதி ஆட்டம் குறைந்த ஸ்கோர் போட்டியாக மாறியது. 49.4 ஓவரில் 212 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்காவை ஆல் அவுட் செய்த ஆஸ்திரேலியா பின்னர் 47.2 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து சேஸிங்கை கஷ்டப்பட்டே முடிக்க முடித்தது. இந்தப் பிட்சும் சராசரி என்றே மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா ஆடிய 11 ஆட்டங்களில் 5 ஆட்டங்களுக்கான பிட்ச் ‘ஆவரேஜ்’ என்ற மதிப்பீட்டையே பெற்றுள்ளது. இறுதிப் போட்டி உட்பட இங்கிலாந்துடன் ஆடிய லக்னோ பிட்ச், பாகிஸ்தானுடன் ஆடிய அகமதாபாத் பிட்ச், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆடிய பிட்ச், சென்னையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆடியப் பிட்ச் எல்லாமே ஆவரேஜ் பிட்ச் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் உண்மையில் படுமோசமான பிட்ச் ஆன மும்பை பிட்ச் ‘நல்ல பிட்ச்’ என்ற ரேட்டிங்கைப்பெற்றிருப்பது புரியாத புதிர். மொத்தத்தில் இந்த உலகக்கோப்பைக்குப் போடப்பட்ட பிட்ச்கள் எல்லாம் சராசரிக்கும் கீழ்தான், அதுவும் அவுட் ஃபீல்ட் படு மோசமாக அமைந்தது கண்கூடு. உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியம் பிட்ச்களைக் கூட பரமாரிக்க முடியாத நிலையிலா உள்ளது?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE