ஒயிட்வாஷ் தோல்வியைத் தவிர்க்குமா இந்தியா?: வேக வாண்டரர்ஸில் புதனன்று இறுதி டெஸ்ட்

By ராமு

 

இரண்டு டெஸ்ட் தோல்விகள் குறித்த ஏகப்பட்ட அலசல்கள், கேப்டன் கோலியின் அணுகுமுறை குறித்த கருத்துகள் ஆகிய இடி மின்னல்களுக்குப் பிறகு வேகம், ஸ்விங், பவுன்ஸ் கொண்ட வாண்டரர்ஸ் மைதானத்தில் நாளை (புதன்) இந்திய அணி இறுதி டெஸ்ட் போட்டியில் களமிறங்குகிறது.

இதுவரை ஜொஹான்னஸ்பர்கில் இந்திய அணி தோற்றதில்லை அதே போல் தென் ஆப்பிரிக்காவில் ஒயிட்வாஷ் ஆனதில்லை. இந்த இரண்டு விஷயங்கள் பாதுகாக்கப்படுமா அல்லது உடையுமா என்பது இந்திய அணியின் அணுகுமுறையையும் தீவிரத்தையும் பொறுத்தது.

ரவிசாஸ்திரியின் (மௌட்டிகமான) கருத்தின் படி 1992 முதல் தென் ஆப்பிரிக்கா சென்ற ‘பலவீனமான’ இந்திய அணியும் ஒயிட் வாஷ் ஆனதில்லை, தற்போது கோலியின் ‘வலுவான’ அணியும் அதைப் பராமாரிக்குமா என்பதைப் பார்க்க வேண்டும். ஒருமுறை இந்த பிட்சில் இந்திய அணி வென்றுள்ளது. 2006-ம் ஆண்டு இந்த வெற்றி சாத்தியமானது, இதுவரை இந்த மைதானத்தில் 4 முறை ஆடியும் ரவிசாஸ்திரி (மௌட்டிகமாக) கூறும் ‘பலவீனமான’ இந்திய அணிகள் தோற்றதில்லை.

2015-16 இந்திய தொடருக்கு முன்பாக வெளிநாட்டில் தொடரை இழக்காத தென் ஆப்பிரிக்கா அந்தத் தொடரில் இந்தியாவின் குழிபிட்சில் 3-0 உதை வாங்கியதை இன்னமும் மறக்க முடியவில்லை, அதன் ஆக்ரோஷம் அதன் ஆட்டத்தில் வெளிப்படுகிறது, அதன் வீரர்கள் இந்தத் தொடரை எவ்வளவு சீரியசாக ஆடி வருகின்றனர் என்பதும் தெரிகிறது, டிவில்லியர்ஸ் சமயம் பார்த்து தனது டெஸ்ட் வருகையை இந்தத் தொடருக்காக ஒத்தி வைத்திருக்கிறார் என்பது அவரது உறுதியான ஆட்டத்திலும் தெரிகிறது. இந்த மைதானத்தில் நடைபெற்ற கடந்த 2 டெஸ்ட் போட்டிகள் 3 நாட்களில் முடிந்துள்ளது.

இந்திய அணி 4 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஹர்திக் பாண்டியாவுடன் களமிறங்கவே அதிக வாய்ப்புள்ளது, ஆனால் அப்படிச் செய்தால் அது அஸ்வினுக்கு மீண்டும் இழைக்கப்படும் அநீதியாகும், எவ்வளவு பெரிய கிரீன் டாப் பிட்சாக இருந்தாலும் ஆஸ்திரேலியா நேதன் லயனை அணியிலிருந்து நீக்காது. ஸ்பின் என்பது ஒரு வெரைட்டி, அதனை அந்தச் சூழ்நிலைகளில் திறம்படப் பயன்படுத்தும் அளவுக்கு கோலிக்கு அனுபவம் போதாது.

அணியில் ரஹானே மீண்டும் அழைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, கிட்டத்தட்ட இதே வகையான லார்ட்ஸ் பிட்சில்தான் ரஹானே ஒரு அருமையான சதத்தை எடுத்தது, பிற்பாடு இஷாந்த் சர்மாவின் அபார பந்து வீச்சின் மூலம் இந்தியாவுக்கு வெற்றியைப் பெற்றுத்தந்தது. அப்படித்தான் நடக்க வேண்டும் என்று இப்போதும் ரசிகர்கள் ஆசைப்படுகின்றனர். பேட்டிங்குக்கு கடினமான பிட்ச் இது என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. இந்திய அணிக்கும் வெற்றி வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் நம் பந்து வீச்சை தென் ஆப்பிரிக்க அணி ஆங்காங்கே நன்றாக ஆடியதே தவிர ஆதிக்கம் செலுத்த முடியவில்லை.

பேட்டிங்கில் கோலி தன் ஈகோவை தள்ளி வைத்து விட்டு களவியூகத்தைக் கவனித்து பொறியில் சிக்காமல் ஆட வேண்டும், மிட்விக்கெட்டை காலியாக வைத்து வேக இன்ஸ்விங்கரை வீசும் போது அதனை பவுண்டரி அடித்தால்தான் என் ஈகோ சாந்தியடையும் என்று ஆடுவது தவறு, அப்படி ஆடப்போய்தான் எல்.பி. பொறியில் சிக்குகிரார் கோலி. முதலில் பவுலர்களின் தரத்தை மதிக்க வேண்டும், தொடக்கத்தில் பிட்ச், பந்து வீச்சுக்கு தன் ஈகோவை சரணடையச் செய்ய வேண்டும், பிறகுதான் ஆதிக்கம் கைகூடும். சச்சின் டெண்டுல்கர் 2004 ஆஸ்திரேலிய தொடரில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்துகளில் ஆட்டமிழந்ததையடுத்து சிட்னியில் ஆஃப் திசை பக்கமே திரும்பாமல் ஆடி 241 ரன்களை எடுத்தார், ஈகோ பெரிதல்ல, சூழ்நிலைக்கு எதிராக ஆதிக்கம் செலுத்துவதே கிரேட் பிளேயர் என்பவருக்கு அழகு. அடிலெய்டில் மகா இலக்கை விரட்டிய கோலி, சாதாரண இலக்குகளை விரட்ட முடியாமல் சாதுவாக அவுட் ஆவது அவர் கூறும்,அவரிடம் உள்ளதாக அவரே கூறும் ஆக்ரோஷத்துக்கு சான்றாகாது.

தென் ஆப்பிரிக்க அணியில் ஆல்ரவுண்டர் பெலுக்வயோ அல்லது பேட்ஸ்மென் டி புருய்ன் ஆட வாய்ப்புள்ளது. மஹராஜ் ஆடுவது கடினம். இந்திய அணியில் ரஹானே, புவனேஷ்வர் குமார் நிச்சயம் திரும்புவது போல்தான் தெரிகிறது. விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னொரு விறுவிறுப்பான, சவாலான டெஸ்ட் போட்டியாக இது அமையும். இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு இந்த டெஸ்ட் தொடங்குகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்