“கோலி உடனான வாக்குவாதம் ஏன்?” - கவுதம் கம்பீர் விளக்கம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த ஐபிஎல் சீசனில் விராட் கோலி உடனான வாக்குவாதம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து கவுதம் கம்பீர் விளக்கம் கொடுத்துள்ளார். கடந்த சீசனில் ஆர்சிபி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி லக்னோவில் நடைபெற்றது. அப்போது இருவரும் வார்த்தை போரில் ஈடுபட்டனர்.

கிரிக்கெட் உலகில் இது விவாதப் பொருள் ஆனது. சமூக வலைதளங்களில் பலரும் தங்களது கருத்தை தெரிவித்திருந்தனர். இந்த சம்பவம் நடந்து ஏழு மாதங்கள் கடந்த நிலையில் அது குறித்து கம்பீர் விளக்கம் கொடுத்துள்ளார்.

“அந்த தருணத்தில் நான் ஒரு வழிகாட்டியாக செயல்பட்டிருந்தேன். எனது அணியின் வீரர்களை பாதுகாக்கும் விதமாக நான் செயல்பட்டேன். போட்டி நடைபெறும் நேரத்தில் நான் குறுக்கிடவில்லை. போட்டி முடிந்த பிறகும் வாக்குவாதம் தொடர்ந்தது. அதனால் அணியின் ஆலோசகர் என்ற முறையில் எங்கள் வீரர்களுக்கு ஆதரவாக பேசினேன்” என கம்பீர் தெரிவித்துள்ளார். போட்டியின் போது கோலி மற்றும் நவீன்-உள்-ஹக் இடையே வாக்குவாதம் எழுந்தது. போட்டி முடிந்த பிறகு நவீனுக்கு ஆதரவாக கம்பீர் அதில் இணைந்தார்.

லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் கம்பீர் தன்னை ‘பிக்ஸர்’ என சொல்லியதாக ஸ்ரீசாந்த் தெரிவித்திருந்தார். ஐபிஎல் கிரிக்கெட்டில் ஸ்பாட் பிக்ஸிங் குற்றச்சாட்டில் 7 ஆண்டு காலம் கிரிக்கெட் விளையாட தடையை ஸ்ரீசாந்த் எதிர்கொண்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE