“கோடை கால கிரிக்கெட்டுக்கான தலைப்பு செய்தி” - தன் மீது ஜான்சன் வைத்த விமர்சனம் குறித்து வார்னர் பதில்

By செய்திப்பிரிவு

சிட்னி: தன் மீது மிட்செல் ஜான்சன் வைத்த விமர்சனம் குறித்து டேவிட் வார்னர் பதில் அளித்துள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் வார்னர் பங்கேற்று விளையாடும் கடைசி டெஸ்ட் தொடராக அமைந்துள்ளது. அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளார்.

வார்னரை ஏன் ஒரு நாயகனை போல கொண்டாட வேண்டும் என முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிட்செல் ஜான்சன் அண்மையில் தெரிவித்திருந்தார். மேலும், பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் அவரை சேர்த்தது ஏன் என்றும், அவருக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஃபேர்வெல் போட்டி அவசியம்தானா என்றும் விமர்சித்திருந்தார். இதனை பாட்காஸ்ட் மூலமாக அவர் தெரிவித்திருந்தார்.

கடந்த 2018-ல் பந்தை சேதப்படுத்திய விவகாரம் குறித்தும், வர்னரின் தற்போதைய டெஸ்ட் கிரிக்கெட் ஃபார்ம் குறித்தும் ஜான்சன் பேசி இருந்தார். பொதுவெளியில் பகிரங்கமாக அவர் வைத்த இந்த விமர்சனத்தை அடுத்து வார்னருக்கு பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர். இருவரும் இதை அவர்களுக்குள் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என ரிக்கி பாண்டிங், டிவில்லியர்ஸ் ஆகியோர் தெரிவித்திருந்தனர்.

“இது எதிர்வரும் கோடை கால கிரிக்கெட்டுக்கான தலைப்பு செய்தி மட்டுமே. அனைவரும் கருத்து சொல்ல உரிமை உண்டு. நாங்கள் நல்ல டெஸ்ட் தொடரை எதிர்நோக்கி உள்ளோம்” என வார்னர் தெரிவித்துள்ளார். நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனை தெரிவித்திருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE